கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர் மாடிக் கட்டடங்கள் உள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ‘லக்பிம நியூஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த 20 தொடர்மாடிக் கட்டடங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும், அவர் கனடாவில் வசித்து வருவதாகவும் புலனாய்வப்பிரிவு தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இக்கட்டடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய வர்த்தகருக்கே இக்கட்டடம் சொந்தமானது எனவும். நகர அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ‘லக்பிம’ தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தொடர் மாடிக்கட்டங்கள் கனடா வர்த்தகருடையது என்பதும், அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் நிருபிக்கப்பட்டால் இக்கட்டடங்கள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இதே போன்று நாற்பதிற்கும் அதிகமான கட்டடங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.