முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உள்ளதாக மாவட்ட செயலகம் கூறியது.
வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 67 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் இடம் பெயர்ந்துள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்களுள் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் கடந்த வாரம் கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தினூடாக இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு சென்றிராததாலும் சிலர் அங்கு செல்ல தயங்குவதாலும் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை இந்த மாதத்திற்குள் சொந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.