மாலை தீவில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டையடுத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரையும், எதிர்க் கட்சியினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்து ஜனாதிபதி இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அந்நாட்டுப் பாராளுமன்றமான மஜ்லிஸ் பிரதம நீதியரசர், நான்கு எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்ததாகவும், ஜனாதிபதி அங்கு செல்வதற்கு முன்னர் ஆளுந்தரப்புக்கும் எதிர்த்தரப்புக்குமிடையில் எந்தவிதக் கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.
மாலைதீவு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி தீர்த்து வைத்தமை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செய்தியாளர் மாநாட்டைக் கூட்டித் தெளிவுபடுத்திய அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போதும் இதுபற்றி அறிவித்தார்.
கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர் நேற்று முன்தினம் 4.30 அளவில் மாலைதீவு ஜனாதிபதி நசீட் இராஜினாமாச் செய்த அமைச்சரவைக்கு மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து வைத்ததாக செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார். இது முற்றிலும் மாலைதீவின் உள்விவகாரம் என்றபோதிலும், கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒத்துழைப்பையே ஜனாதிபதி வழங்கினார் என்று கூறிய அமைச்சர், அரசியல் நெருக்கடி சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதையடுத்து சகல தரப்பினரையும் இராப்போசன விருந்துக்கு ஜனாதிபதி அழைத்திருந்தாரென்றும் கூறினார். சார்க் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலும், நீண்டநாள் நட்புறவைக் கொண்ட நாடு என்பதாலும் ஜனாதிபதி அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை அவரது இல்லத்திற்குச் சென்று ஜனாதிபதி சந்தித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மாலைதீவில் நிலவிய அரசியல் குழப்ப நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுமையாக தீர்த்து சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து சுமுக நிலைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் புதிய அமைச்சரவையையும் சத்தியப்பிரமாணம் செய்ய வைத்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகக் கூறினார்.
சார்க் நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய நட்பின் அடிப்படையில் ஜனாதிபதியின் இந்த செயல் அமைந்திருந்தது என்றும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.