அமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். நைஜீரியாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான டி 08 மாநாட்டில் பங்கேற்க வந்த வேளை ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.
நைஜீரியா வந்த ஈரான் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அபுஜாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவின் பிசாசுப் படைகளை பூமியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது.
பலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு விரைவில் முடிவுகட்டப் போகின்றோம். விரைவில் எமது வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்றும் ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார். சுமார் 150 மில்லியன் முஸ்லிம்கள் நைஜீரியாவில் உள்ளனர். இம்மக்கள் ஈரான் நிலைப்பாட்டையும் ஈரான் ஜனாதிபதியையும் பெரிதும் பாராட்டினர்.
ஐ. நா வின் தலைமைப் பதவியை நைஜீரியா அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இங்கு டி 08 மாநாடு ஆரம்பமானது. எகிப்து, பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. சுமார் 930 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக ஆத்திரமடைந்த ஐ. நா. அண்மையில் நான்காவது பொருளாதாரத் தடையை ஈரான் மீது கொண்டுவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான் எதிரிகளின் விமானத் தாக்குதலுக்குட்படாத இடத்தில் மற்றொரு அணு உலையை அமைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளது. தனது நாட்டுக் கப்பல்கள் சர்வதேசக் கடற் பரப்பில் சோதனை செய்யப்பட்டால் ஈரான் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவித்தது தெரிந்ததே.