ஜனாதிபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்; கிளிநொச்சியில் விசேட ஏற்பாடுகள்

p.jpgகிளிநொச் சியில் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்கென அம்மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 44 அமைச்சர்களும் அன்றைய தினம் கிளிநொச்சி வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் நடை பெறவிருப்பதனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட மற்றும் முக்கிய அதிகாரிகளும் கிளிநொச்சி வரவிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாக ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

இவற்றைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து பொது மக்களுக்காக விசேட உரையொன்றையும் நிகழ்த்தவிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அபிவிருத்திக் கூட்டம் ஆகியவற்றில் பங்கு பற்றுவதற்காக கொழும்பிலிருந்து வரும் விசேட அதிதிகளுக்கான தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

அத்துடன் 13ஆம் திகதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தலைமையில் பரந்தன் மற்றும் கிளிநொச்சியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிளைகள் திறந்து வைக்கப்பட விருப்பதுடன் 14 ஆம் திகதி நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற விருப்பதாகவும் அதற்காக அமைச்சின் அதிகாரிகள் பலர் அங்கு வருகைதரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *