கோப்பாயில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் துயிலுமில்லத்தை’ இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கோரியுள்ளனர். உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் குரும்பசிட்டி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த இவர்கள், 1994ம் மாதம் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது வன்னிக்குச் சென்று கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் வசித்து வந்தனர்.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வவுனியா அகதி முகாமிலிருந்து விட்டு தற்போது யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் நிலை குறித்து அறிவதற்காக இன்று பிற்பகல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா, அதன் ஊடகச் செயலாளர் த.கஜன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைப் பார்வையிட்டு, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தாங்கள் மிகவும் வறியநிலையில் வாழ்வதாகவும் தங்களுக்கான நிவாரண உதவிகள் கூட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களின் சொந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அங்கு செல்ல முடியாமலிருப்பதாகவும், தங்களுக்கு தங்கியிருப்பதற்கான மாற்று இடங்களும் காட்டப்படாத நிலையில் எங்கு செல்வதென தெரியாத நிலையிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூட்டணியினர் அம்மக்களிடம் தெரிவித்தனர்.
பார்த்திபன்
என்னப்பா இது புதுக்கதையாக இருக்கு. கோப்பாயிலிருந்த மாவீரர் நினைவிடமும் முற்றாக படையினரால் அழித்தொழிக்கப்பட்டு விட்டது என்று ஐரோப்பிய ஊடகங்கள் பல சில வாரங்களுக்கு முன் செய்திகள் சொல்லிற்றே. ஒருவேளை இந்தச் செய்திகளைக் கேட்டுவிட்டுத்தான் படையினர் அதை அழிக்க இப்போ வெளிக்கிட்டினமோ?? அல்லது விஸ்வாவிற்கு அந்தப் பழைய செய்தி தற்போது தான் தெரிந்ததோ??
vishva
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை அழிக்கும் நடவடிக்கைகள் எற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டாலும் அதன் சுற்றுமதில்கள், நடுவே உள்ள மேடை என்பன இன்னும் காணப்படுகின்றன. அதனை முற்று முழுதாக இடித்தழித்து துப்பரவாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
-விஸ்வா