பஹ்ரைன் நாட்டிலுள்ள சுமார் 800 இலங்கைப் பணிப் பெண்கள் வேலைப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது. இவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வேலைப் பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர தூதரக அதிகாரிகளினூடாக நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக மேலதிக பொது முகாமையாளர் எம். ருகுணுகே நேற்று கூறினார்.
13 மணி நேரம் வேலை வாங்குவதாகவும் உரிய சம்பளம் வழங்குவதில்லை எனவும் தொழிலாளர்களின் நலன்களை கவனிப்பதில்லை என்றும் கூறி மேற்படி இலங்கைப் பணிப்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். உணவு மற்றும் குடிநீர் என்பன உரிய முறையில் வழங்குவதில்லை எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கைப் பணிப்பெண்களின் போராட்டம் குறித்து குவைத் தூதரகம், பஹ்ரைன் கொன்சூலர் பிரிவு என்பவற்றினூடாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ருகுணுகே கூறினார். இலங்கைப் பணிப்பெண்கள் இன்று முதல் வேலைக்குத் திரும்பும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.