கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பம்

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் என்பவற்றையொட்டி கிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்றும் நாளையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன. இந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலக மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டமொன்றும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பல கிளிநொச்சியில் நடைபெறுவதையிட்டு கிளிநொச்சி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இன்று காலை கிளிநொச்சி கரச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்ததான எரிபொருள் நிரப்பும் நிலையத்தினை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளைய தினம் 14ம் திகதி கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும் மில்கோ நிறுவனமும் இணைந்து கிளிநொச்சியில் பால் பொதிசெய்யும் தொழிற்சாலையொன்றை அமைக்கவுள்ளதுடன் இத்தொழிற்சாலையை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

அத்துடன் கலாசார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள மாவட்டக் கலாசார பயிற்சிப் பட்டறை நிகழ்வொன்று மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி கலந்துகொள்ளவுள்ளார். சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் மக்கள் சேவை நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இந்நிகழ்வில் கலந்துகொள்வார். குறிப்பாக வட மாகாணத்திலுள்ள முதியோர் பயன்பெறும் வகையில் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அதேவேளை; நேற்று முன்தினம் அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையில் விசேட நடமாடும் சேவை கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *