வேலணை வைத்தியசாலையில சுருக்கிட்ட நிலையில் மரணமான மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணம் தொடர்பாக அவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நேற்று (14-07-20100) நீதிமன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நிதிமன்றில் நடைபெற்றது. மரணமான தர்சிகாவின் சகோதரி, வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதி உத்தியோகத்தர்கள், சம்பவ தினத்தன்று சடலம் மீட்கப்பட்ட விடுதி அறைக்கதவை உடைத்துத் திறந்தவர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதன்படி தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் உள்ளதாகவும், டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் தர்சிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வைத்தியப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவமாது தர்சிகாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக பலர் வாக்குமூலமளிக்க முன்வந்த போதிலும், பொலிஸார் அவற்றைப் பெற மறுத்துவிட்டதாகவும், அதனால் இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் நேற்று பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
சாந்தன்
//….. டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்,,,,,//
ஆனால் பொலிசார் அவரை வைத்தியசாலையின் அவசர வைத்தியப்பிரிவில் அனுமதித்துள்ளனர். சொல்லப்பட்ட காரணம் வேலணை மக்கள் அவரைத் தாக்கியதனால் சிகிச்சை வேண்டுமாம்!