களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணம் நேற்று வியாழக்கிழமை காலை களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடிக் கிளையின் உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடியிலுள்ள இலங்கை வங்கியிலிருந்து தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது மணல் வீதி எனுமிடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை மறித்துத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முப்பது இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதோடு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மணல் வீதி என்னுமிடத்தில் ஏற்கனவே பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று இருந்து பின்னர் அது அகற்றப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக வங்கி உத்தியோகத்தர்கள் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.