“அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் மக்களிடம் மீளளிக்கப்பட மாட்டாது” – அமைச்சர் ரம்புக்வெல -“உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்” – அமைச்சர் டக்ளஸ்

Douglas DevanandaKeheliya_Rambukwellaஅதி உயர் பாதுகாப்பு வலயங்களிலிருக்கும் காணிகள் பொதுமக்களுக்கு மீளளிக்கப்படமாட்டாததெனவும், அதற்குப் பதிலாக அம்மக்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும் எனவும் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.  ஆனால் அதனை நிராகரித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் உரிய மக்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை பேணுவதற்காக வடபகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் இருக்கும் என அமைச்சர் ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். வாராந்த அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (June 16 2010) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது. சிலநாடுகளில் பாதுகாப்பு வலயங்கள் விரிந்து காணப்படுகின்றன. பாதுகாப்பு முகாம்கள், பாதுகாப்பு வலயங்கள் என்பன ஒரு நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானது. பாதுகாப்பு வலயங்கள் தேவை என இனங்காணப்படும் பகுதிகளில் இவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா அதன் பாதுகாப்புத் தேவைக்காக தென்கொரியாவில் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்துள்ளது. தற்போது நாட்டில் காணப்படும் பாதுகாப்பு வலயங்களும், படைமுகாம்களும் அப்படியே இருக்க வேண்டும்.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன. அவை காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு என்பது முக்கியமானது. எனவே, அக்காணிகள் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தள்ளது” என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள இத்தகவல் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல இடங்களில் ஜனாதிபதி உரையாற்றுகின்ற போது பாதுகாப்பு வலயங்கள் நாட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்று கூறியுள்ளார்,

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் யுத்தகாலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்களாக மூடப்பட்டிருந்த இடங்கள் பல இப்போது திறந்து விடப்பட்டுள்ளன. அதேபோல வடக்கிலும் பல பகுதிகள் திறந்து விடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களாக கருதப்பட்ட இடங்கள் சில தினங்களில் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளன.  இவ்வுயர் பாதுகாப்பு வலயங்கள் நாளடைவில் இல்லாமல் போய்விடும்” இவ்வாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றிரவு பி.பி.சி தமிழோசையிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    //…கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் யுத்தகாலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்களாக மூடப்பட்டிருந்த இடங்கள் பல இப்போது திறந்து விடப்பட்டுள்ளன….//

    தமிழர்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்கின்ற விதி அமுல்படுத்தப்படுவது தெரியவில்லையா தோழருக்கு?

    இப்படித்தான் வீணையில் கேட்பேன் என சபதம் எடுத்தார் பின்னர் வீணை என்னடா வெற்றிலை என்னடா அவசியமான நேரத்திலே என பாட்டுப்படித்தார். இனி என்ன படிக்கப்போகிறார் எனப்பார்ப்போம்!

    Reply
  • gotapaya
    gotapaya

    தோழருக்கு அங்கு என்னநடக்குது என்று உணரவாவது அறிவிருக்குதோ தெரியாது? தோழர் அன்ட் கோவினர் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற கோசத்தை விட்டுட்டு, “மத்தியில் காட்டாட்சி,மாநிலத்தில் சுருட்டலாட்சி” என்று மாற்றி விட்டார்கள். தோழருக்கு அங்கு தமிழ் மக்களின் பிரட்சனையை விட சிறிலங்கா ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதிலேயே காலம் கழிக்கிறார்.

    இவ்வளவு காலமும் புலி, புலி என்று கிலி கொண்ட கூட்டத்தினரும், புலி அழிச்சுட்டுது இப்ப என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கிறார்கள்.

    Reply
  • thaya
    thaya

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
    நீங்கள் செல்லும் வழி நேர்வழி ஆகட்டும். மத்தியில் கூட்hடசி! மாநிலத்தில் சுயாட்சி! இதுவே என்றும் உங்கள் சொல்லாட்சி ஆகட்டும். செயலாட்சியும் ஆகட்டும். மக்களின் நல்லாட்சியும் இதுவே… மயிலாட வான் கோழி தடை போடுமோ.. தொடர்ந்து நடை போடு தோழா!…

    Reply