நெதர்லாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை திருமணக் கோலத்திலேயே நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்!

ஒன்பது வருடங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் திருமணம் முடித்துவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்யமுற்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  மாப்பிள்ளை கோலத்தில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். கடந்த 12ம் திகதி மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மல்லாக நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

குறித்த நபர் நெதர்லாந்திலிருந்து வருகை தந்தவர் எனவும், குறித்த 12ம் திகதி அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததாகவும், அவ்வேளையில் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பெண்ணொருவரை நெதர்லாந்திற்கு அழைத்துச்சென்று சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தவர் என அவரது முன்னைய மனைவியின் சகோதரர் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

விசாரணைகளின் போது, தான் முன்னர் சட்டபூர்வமாகத் திருமணம் முடிக்கவில்லை எனக்கூற, மனைவியின் சகோதரர் எனக் குறிப்பிடப்பட்டவரால் திருமணப் புகைப்படங்கள் சில நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்படங்களில் ஒன்றில் குறிப்பட்ட நபர் பெண்ணிற்கு தாலிகட்டும் படமும் காணப்பட்டது. அத்தோடு, திருமணத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, அந்தப்படத்திலுள்ள பெண் தனது ஒன்றுவிட்ட சகோதரி எனவும், அவரை நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே திருமணம் செய்வது போன்று நடித்ததாகவும்,  அப்பெண்ணின் குடும்பத்தவர்களின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

நீதவான் சில கேள்விகளை அவரிடம் தொடர்ந்து கேட்டபோது அதற்குப் பதில் கூறமுடியாமல் முரண்பாடான பதில்களை கூறியதையடுத்து குறித்த நபரை எச்சரித்த நீதிபதி ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், ஞாயிற்றுக்கிழமை தோறும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • கந்தையா
    கந்தையா

    அப்புறம் அவரது திருமணத்திற்கு என்ன நடந்தது விஸ்வா?

    /விசாரணைகளின் போது அந்தப்படத்திலுள்ள பெண் தனது ஒன்றுவிட்ட சகோதரி எனவும், அவரை நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே திருமணம் செய்வது போன்று நடித்ததாகவும், அப்பெண்ணின் குடும்பத்தவர்களின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்//

    இது போன்ற நிகழ்வுகள் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது.
    அந்த நபரின் பெயரைப் போட்டிருந்தால் நெர்லாந்தில் வசிப்பவர்கள் அவரைப்பற்றி மிச்சம் சொல்லியிருப்பார்களே…

    Reply
  • Nirthanan
    Nirthanan

    எல்லோறும் உங்கள் அகதி கோரிக்கைகளை சரி பார்த்து கொள்ளவும். இப்படியான சம்பவங்கள் நிறைய தெரியும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //நெதர்லாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை திருமணக் கோலத்திலேயே நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்!//

    மாப்பிள்ளையை மாமியார் வீட்டிற்கு அனுப்ப மாப்பிள்ளைக் கோலத்தில் அழைத்துச் சென்றுள்ளார்கள். சரியாகத் தான் செய்துள்ளனர்………..

    Reply