வீட்டில் குழந்தையுடன் தனித்திருந்த பெண்ணைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்ற சம்பவம் கோப்பாய் தெற்கில் நடைபெற்றுள்ளது. விஜயகுமார் வதனி என்ற இளம் தாயே வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். நேற்று (16-07-2010) முற்பகல் 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கணவர் வழமை போல் வேலைக்குச் சென்ற பின் கைக்குழந்தையுடன் வீட்டிலிருந்த குறித்த பெண் தலைக்கவசம் அணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கத்தி வெட்டுக்குள்ளானார். அப்பெண் கூக்குரலிடவே வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். நெஞ்சுப்பகுதியிலும், இருகைளிலும், கால்களிலும் கத்திவெட்டுக் காயங்களுடன் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.