கொழும்பில் வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுச்செட்டித்தெரு வீடொன்றில் வேலை செய்து வந்த வெள்ளைச்சாமி சீதாராணி (வயது 44) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டு உரிமையாளரும் அவரது மாமியாரும் புதுக்கடை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், அதன் மத்திய மாகாணசபை உறுப்பினரான முரளி ரகுநாதனும் கண்காணித்து வருவதாக அக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்செட்டித்தெருவிலுள்ள தொடர்மாடி வீடொன்றில் குறித்த பெண் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்ததாகவும் வீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் களவு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கினால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.