கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையிட்டு கல்முனைப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவாக நடைபெறும் தமிழ்ச் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்வர்.
தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. அறிவுநம்பி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இ. வெங்கடேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் கே. பிரேம்குமார், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் எஸ். எம். இஸ்மாயில் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ. பொ. பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலர் எச். கே. யூ. கே. வீரவர்த்தன, கிழக்கு மாகாண பிரதி கல்விச் செயலாளர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வர்.
இந்நிகழ்வில் கெளரவத்திற்குரிய முதன்மை பேராளர்களாக பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் சி. சிவலிங்கராசா, பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்வர்.
இன்றைய நிகழ்வில், பெரிய நீலா வணையில் இருந்து காரைதீவு வரையுமான சிறப்பு ஊர்தியுடனான ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் இலக்கியவாதிகள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வர். இன்று காலை 8.30 அளவில் ஊர்வலம் ஆரம்பமாகும். காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம் புதுப் பொலிவு பெற்றுள்ளது. பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவின் சகல பொது நல அமைப்புகளும் விழா ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன. பிரதான விழா விபுலானந்த மத்திய கல்லூரியில் 12.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
காலை 9.30 மணிக்கு காரைதீவு வட எல்லையில் மாளிகைக்காட்டுச் சந்தியிலிருந்து பேரூர்வலம் ஆரம்பமாகும். தமிழ் பாரம்பரிய கலை வடிவங்கள், தமிழின்னிய அணிகள், பாண்ட் வாத்திய அணிகள், காவடி, கரகாட்டம், கோலாட்டம் சகிதம் கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து அங்கிருந்து விழா அதிதிகள், பேராளர்கள் சகிதம் ஊருக்குள் ஊர்வலம் நகர்ந்து விழா நடைபெறும் விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சென்றடையும்.
விழாவில் கிழக்கிலங்கையின் தமிழ்ப் படைப்பாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுவாமி விபுலானந்தரின் மருமகள் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை (இ. அதிபர்) கெளரவ பேராளராக அழைக்கப்படுகிறார். மாகாண கல்வித் திணைக்களம் கல்முனைக்கு வருகை தந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
Indiani
I feel very proud of you all