கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளரின் உதவியாளராகவுள்ள விஸ்வமடுவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். முகமூடிகள் அணிந்து முச்சக்கரவண்டியொன்றில் விஸ்வமடுவிலுள்ள இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றே இந்தப் பெண்ணைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது.
உறவினர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்துள்ளார்.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றைய சம்பவத்தில் கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தொண்டராசிரியராகப் பணியாற்றும் 26 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.
முன்னைய பெண் தாக்கப்பட்ட அதே பாணியிலேயே இந்தப் பெண்ணும் தாக்கப்பட்டிருக்கின்றார். முகமூடி அணிந்த நிலையில் முச்சக்கரவண்டியில் வந்த நான்கு இளைஞர்கள் முச்சக்கரவண்டியை விட்டு இறங்கியதுடன், இந்தப் பெண்ணைத் தாக்கியதாகவும் அவ்வேளை இவரது வீட்டில் நின்ற கணவனும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பெண்கள் தாக்கப்பட்ட போதிலும் இவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோ, உடமைகளோ அபகரிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.