ஓய்வூதிய சட்டங்களில் திருத்தம்

parliament.gifஅரசாங்க ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவரில் தங்கி இருந்த மனைவி, பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதலான சலுகைகளை அனுபவிக்கக் கூடிய வகையில் நடைமுறையிலுள்ள ஓய்வூதியச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இச்சட்டங்களின் திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேற்று பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தன.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டப்ளியு. ஜோன் செனவிரட்ன, விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய நிதியாக (திருத்தம்) சட்ட மூலம் விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதிய திருத்தம் சட்டமூலம் என்பவற்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அமைச்சர் தனதுரையில், அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் இறந்தால் அவரது கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதல் சலுகைகளை அனுபவிக்கக் கூடியவகையில் விதவைகள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம், விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம் பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் உயிரிழந்த அரசாங்க ஊழியர்கள், படை வீரர்கள் ஆகியோரின் குடும்பத்தவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் படி உயிரிழந்த அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 21 வயது வரையே ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. புதிய திருத்தத்தின் கீழ் இவ்வயதெல்லை 26 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலிருக்கும் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக மற்றும் சமயா சமய அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய திருத்தத்தின் கீழ் குறித்த அரசாங்க ஊழியர் பத்து வருடங்கள் சேவையாற்றி மரணித்திருந்தால் அவரது கணவருக்கோ அல்லது மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ ஓய்வூதியம் வழங்கப்படும்.

தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் அரசாங்க நிறுவனங்கள் மூடப்படுவதன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ அரச ஊழியர் ஒருவர் தொழிலை இழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய ஏற்பாட்டின் கீழ் 55 வயது நிறைவடைந்ததும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.

அரசாங்க ஊழியரொருவர் செய்த குற்றத்திற்காக வேலை நீக்கம் செய்யப்படுவாராயின் அவரது குடும்பத்திற்கு தற்போது ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் அரச ஊழியர் செய்த தவறின் பலாபலன்களை அவரது மனைவியோ, குடும்பத்தினரோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காக குறித்த அரச ஊழியர் பத்துவருடம் சேவையாற்றி இருந்தால் அவரது குடும்பத்திற்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேலும் யுத்தம் காரணமாக உயிரிழந்த படைவீரரின் இளம் வயது மனைவிக்கு தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

அவர் மறு மணம் புரிந்தால் அந்த ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிடு கின்றது. ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ் உயிரிழந்த படை வீரரின் மனைவி மறுமணம் செய்தால் ஓய்வூதியத்தில் அரைவாசித் தொகை கிடைக்கப்பெறும். பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் காரணமாக அரச ஊழியர் ஒருவர் இறந்தால் 55 வயது வரை அவரின் மனைவிக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

55 வயதின் பின்னர் சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் அந்தக் குடும்பம் பாதிக்கப்படுகிறது. எனவே அவரின் குடும்பத்துக்கு வழங்கும் ஓய்வூதியத்தை அதிகரிக்க உள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதி அமைச்சர்கள் ஆகியோரின் அந்தரங்க செயலாளர்கள், இணைப்புச் செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோருக்கு 5 வருடங்களின் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால் அவர்களின் மறைவின் பின் அவர்களது குடும்பத்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறையை தீர்க்கும் வகையிலும் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தில் காணப்படும் சகல நிர்வாக சிக்கல்களும் தீர்க்க இதனூடாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *