இலங்கையின் தற்போதைய நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு தொடர்பான விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க லடக் செல்லும் வழியில் செவ்வாய் அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வருகை தந்திருந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரணில் கூறியிருப்பதாவது; வட,கிழக்கு மாகாணங்களிலுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசு தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் அரசிடம் விளக்கம் கேட்டோம்.
எதிர்க்கட்சிகள் நிறைவேற்றதிகார பிரதமருக்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. பொலிஸ், நீதி, நிர்வாகம், தொழில் துறைகளில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்தியா இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சு நடத்த வேண்டுமென்று ரணில் கூறியுள்ளார்.