“போரினால் கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர

due.jpgபோர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள், ஊனமுற்றோர். சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். போரிலே கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றோர், சொத்துக்களை இழந்தோர் அகியோருக்கு இழப்பீடுகள் வழங்க 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என நேற்று  அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ஆட்கள், ஆதனங்கள் மற்றும், கைத்தொழில்களை புனரமைப்பு செய்யும் அதிகாரசபையிடமும் நிதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி. வவுனியா அகிய இடங்களில் நடைபெற்ற நடமாடும் சேவைகளில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவை கிராமசேவகர். பிரதேசச் செயலாளர்கள் உறுதியளித்ததன் பின்னர் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்- “எமது நடமாடும் சேவையில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உதவி கோரி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகள். இளம் பெண்கள் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக போராட்டத்தில் இணைத்து விடுவார்கள் என்கிற அச்சத்தில் பெற்றோரினால் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள்.  இவர்களில் 21-22 வயது இளம் விதவைகள், இரண்டு மூன்று குழந்தைகளுடன்  அநாதரவாக உள்ளனர்.  இது மாபெரும் சமூகப்பிரச்சினை ஆகும். புலிகளின் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோரது மனைவிமாரும், எம்மிடம் உதவி கோரி வந்தனர். இந்த விதவைகள் அனைவரும் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி வருமானம் ஈட்டிக்கொள்ள வழி செய்து கொடுக்கப்படும்” எனக் கூறினார்.

அமைச்சர் டியூ குணசேகர  அவரது நடமாடும் சேவையூடாக போரின் பின்னான பொதுமக்களின் நிலைமைகளை யதார்த்தமாக விளங்கிக் கொண்டுள்ளார் என்பது அவரது இக்கருத்துக்களிலிருந்து தெரிய வருகின்றது. ஆனாலும், ஏனைய அமைச்சர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும், இழப்பீடுகள் வழங்கப்படுவது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவை தற்போது வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *