கொழும்பில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆடிவேல் விழா நேற்று மிகக் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. ஜுலை 27 ஆந் திகதி வரை நடைபெறும் ஆடிவேல் விழாவின் ஆரம்பமாக கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் காவடி ரதபவனி நேற்றும் காலை எட்டு மணியளவில் ஆரம்பமாகி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம் வரை சென்றது. பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ சென்ற ரதபவனி அலரி மாளிகையில் விசேட பூஜைக்காகத் தரித்து நின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாரியாரும் மாளிகைக்கு முன்பாக மேள தாளத்துடன் அழைத்து வர அவர்கள் காலி வீதியில் வைத்து விசேட பூஜைகளை நடத்தினர். ஆடிவேல் விழாவில் இவ்வாறு ஜனாதிபதி விசேட பூஜை வழிபாடு நடத்தியது இதுவே முதற் தடவையாகும். அங்கு ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் ஆலய அறங்காவலர் சபையினர் பொன்னாடையும் மலர்மாலையும் அணிவித்துக் கெளரவித்தார்கள். மேலும், செட்டியார் தெரு ஸ்ரீபுதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி இன்று (24) காலை 7.30 அளவில் ஆரம்பித்து பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தைச் சென்றடைகிறது. சம்மாங்கோடு ஆலய காவடி ரதம் திங்கட்கிழமை (26) திரும்பி வரவுள்ள நிலையில் வெள்ளி ரதம் 27 திங்கட்கிழமை மீண்டும் செட்டியார் தெரு ஆலயத்தை வந்தடையும்.