திரு கோணமலை மாவட்டத்தில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே நேரம், டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்போருக்கு வெகுமதிகளுடன் கெளரவமும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.
திருமலை மாவட்டத்திலிருந்து டெங்கை ஒழிக்கும் செயல்திட்டம் தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து துறைசார் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
திருமலை நகரம் கிண்ணியா பிரதேசங்களில் டெங்கு தீவிரமடைந்துள்ளது. உடனடியாக இப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பை தீவிரப்படுத்துமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர் சுபைர், இப்பிரதேசங்களில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் குறித்து கூடுதலான கவனம் செலுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.