தபால் திணைக்கள மத்திய தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் சட்டப்படி வேலைப் போராட்டத்தினால் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5 இலட்சம் கடிதங்கள் வரை விநியோகிக்கப்படாது குவிந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. நான்கு தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதை கண்டித்து 4 தொழிற் சங்கங்கள், கடந்த வியாழக்கிழமை முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட்டுள்ளன.
மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் நால்வரே வேலை நீக்கம் செய்யப் பட்டதாகவும் இந்த வேலை பகிஷ்கரிப்பு முறையற்றது எனவும் தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க கூறினார். சீரான சேவைகளை வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதிவுத் தபாலில் அனுப்புவதற்காக வழங்கப்பட்ட 6 ஆயிரம் கடிதங்களுக்கு இவர்கள் 50 ரூபா வீதம் குறைவாக அறவிட்டுள்ளதாக தபால் மா அதிபர் கூறினார். இதனால் தபால் திணைக்களத்திற்கு 3 இலட்சத்து 8 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நஷ்டத் தொகையை குறித்த நிறுவனங்கள் மீள வழங்கியுள்ளன.
மேற்படி வேலை பகிஷ்கரிப்பினால் 368 பதிவுத் தபால் பொதிகள் கொழும்பிலும் 406 பொதிகள் கொழும்புக்கு வெளியிலும் விநியோகிக்கப்படாதுள்ளதோடு 23,966 கடிதங்களும் 8834 பதிவுக் கடிதங்கள் கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் முடங்கிக் கிடப்பதாக தபால் மா அதிபர் கூறினார். மேற்படி மோசடி குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை முறையற்ற விதத்திலே 4 ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத் தலைவர் ஜயந்த விஜேசிங்க கூறினார். 5 ஆவது நாளாக வேலைப் பகிஷ்கரிப்பு தொடர்வதாகவும் இது குறித்து பேச்சு நடத்த அமைச்சர் முன்வரா விட்டால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் வேலைப் பகிஷ்கரிப்பால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2 தினங்களுக்குள் தமது கோரிக்கைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.