யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொறியியல் பீட மாணவன் உட்பட இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஞாயிறு இரவு 11.30 மணியளவில் பழம் வீதியில், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டபோதே இந்த இரு மாணவர்களும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலியிலிருந்து பழம் வீதியூடாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் பருத்தித்துறை குருநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 24), சுண்டுக்குழி, கொழுப்புத் துறைவீதி பண்டியந்தாழைச் சேர்ந்த கண்டி பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட 2 ஆம் வருட மாணவனான அன்ரன் யோகராஜா கலிஷ்ரஸ் கஜேந்திரன் (வயது 24) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தான் இச்சம்பவத்தில் பலியான எஸ்.சந்துருவின் பிறந்த தினம் என்பதுடன், கஜேந்திரன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குப் பயிற்சிக்காக வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இருவரது சடலங்களையும் யாழ்.மாவட்ட நீதிபதி ஏ.பிரேம்சங்கர் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதுடன், யாழ்.பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.