பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம்

ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு கடந்த திங்கட்கிழமை இந்தத் திகதியை அறிவித்திருக்கிறது. எந்தவொரு குடியேற்றவாசியும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க அல்லது தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் அதாவது பிரிட்டிஷ் பிரஜையாக அங்கிருக்க விரும்பினால் அவர் தன்னால் ஆங்கிலத்தை பேசவும் விளங்கிக்கொள்ளவும் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவதன் மூலம் இதனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த எல்லை முகவரமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பரீட்சை நடத்துபவர்களினால் நடத்தப்படும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

அடிப்படை ஆங்கில அறிவை விண்ணப்பதாரிகள் வெளிப்படுத்த வேண்டும். இதே அடைவுமட்டமானது புள்ளியடிப்படை முறைமையின் கீழ் வகை 2 இன் கீழ் அனுமதிக்கப்படும் தொழிற்தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கும் தேவைப்படுகிறது. பிரிட்டனுக்குள் இருப்பதற்கு விண்ணப்பிப்போருக்கு இந்தப் பரீட்சையானது கட்டாயமானதாகும் என்று ஐக்கிய இராச்சியத்தின் எல்லை முகவரமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.இந்த அறிவிப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் கடந்த மாதம் விடுத்திருந்தது.

தற்காலிக வதிவிட காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்த ஜோடிகள் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கும் ஆங்கில மொழி அறிவு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வாழ்க்கை முறை தொடர்பான பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டிய தேவையுள்ளது. இது புதிய அடிப்படை ஆங்கிலமொழி அறிவுக்கு மேலதிகமாக தேவைப்படும் விடயமாகும். ஆரம்ப விண்ணப்பப்பத்திரத்தில் இதற்கான படிவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *