வடக்கில் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இம்மாவட்டங்கைளைச் சேர்ந்த மக்களில் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமலுள்ளனர். பலர் தங்களின் சொந்த ஊர்களில் இன்னமும் குடியேறாமால், வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மீள்குடியமர்ந்தவர்கள் மட்டுமே கிராமசேவகர்களால் வாக்காளர் படிவத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் வேறு மாவட்டங்களில் வசிப்பவர்கள் தங்கள் பதிவுகளை அம்மாவட்டங்களில் நீக்கிவிட்டு வரவேண்டும் என வன்னியில் குறிப்பாக கிளிநொச்சிப் பகுதிகளிலுள்ள கிராம சேவகர்கள் பொது மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். 30ம் திகதியுடன் வாக்காளர் பதிவுகள் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இயங்கிவரும் தேர்தல் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட போது, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமலுள்ள நிலையில் வாக்காளர்களாக பதிவு செய்யும் நாட்கள் வன்னியில் நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.