கொழும்பு02 ஹுணுப்பிட்டிய லேக் வீதியிலுள்ள வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் ஊடக நிறுவனத்தின் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை முகம்மூடி அணிந்த இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்நிறுவனத்தின் செய்தி அறையும் அடித்து உடைத்தும் எரித்தும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் இருவரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் குண்டர்கள் கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருப்பதாக அந்த நிறுவன பணியாளர்கள் தெரிவித்தனர். “வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் வெற்றி எவ்.எம்., வெற்றி ரி.வி., சியத்த எவ்.எம்., சியத்த ரி.வி., ரியல் ரேடியோ ஆகிய 5 ஊடகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் வெற்றி ரி.வி.யைத் தவிர ஏனைய 4 ஊடகங்களும் செய்திகளை வெளியிடுகின்றன. இவற்றுக்கான செய்தி அறை மீதே நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டு தீயும் வைக்கப்பட்டுள்ளது.
வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் ஊடக நிறுவனப் பணியாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்று அதிகாலை 1.20 மணியளவில் இரு வாகனங்களில் அந்த ஊடக நிறுவனத்துக்குச் சென்ற இனந்தெரியாத கும்பலொன்று நுழைவாயிலருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தரிடம் செய்தி அறை எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளது. வந்தவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாத வகையில் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை கறுப்புத் துணியால் மறைத்துக் கட்டியிருந்ததுடன், கைகளில் துப்பாக்கிகளும் இரும்புக் கம்பிகளும் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.
எனினும் பாதுகாப்புக் கடமையில் இருந்தவர் செய்தி அறையைக் காட்டாமல் யார் என்று வினவிக் கொண்டிருக்கவே அவரை அந்தக் குழுவினர் தாக்கியுள்ளனர். அதில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் சத்தமிட்ட போது குண்டர்கள் நுழைவாயில் கதவைப் பலவந்தமாகத் திறந்துகொண்டு உள்ளே புகுந்துள்ளனர். அங்கு செய்தி அறை அடங்கலான ஒரு கட்டிடத்தொகுதியும் எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான இன்னுமொரு கட்டிடத் தொகுதியும் இருந்ததால் குண்டர்கள் இரண்டு பக்கமும் சென்றுள்ளனர். இதன்போது எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான கட்டிடத்தொகுதியின் கீழ்ப்பகுதி கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் சத்தத்தையும் கண்ணாடி உடைக்கப்படும் சத்தத்தையும் கேட்டு செய்தி அறைக்குள் இருந்த ஒருவர் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்துள்ளார். இதன்போது வெற்றி எவ்.எம். செய்திப் பிரிவைச் சேர்ந்த இருவர் மட்டுமே செய்தி அறைக்குள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வெளியில் வந்த போது கதவின் இரு மருங்கிலும் பதுங்கியிருந்த குண்டர்களில் இருவர் அவரைப் பிடித்து செய்தி அறை எதுவென்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் செய்தி அறைக்குள் இருந்த மற்றையவர் வெளியில் விபரீதம் நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டு கதவை மூட முயற்சித்திருக்கிறார். இதன்போது வெளியில் இருந்தவர் உள்ளே வர கதவைத் திறக்குமாறு தட்டியதை அடுத்து உள்ளிருந்தவர் கதவைத் திறக்க, வெளியில் சென்றவருடன் சேர்ந்து குண்டர்களும் செய்தி அறைக்குள் புகுந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு ஒருவரைத் துப்பாக்கிப் பிடியாலும் மற்றவரை இரும்புக் கம்பியாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது செய்தி அறைக்குள் இருந்த கணினிகள், பிரின்டர்கள், போட்டோ கொப்பி மெஷின், ஸ்கேனர் என அனைத்தையும் இரும்புக் கம்பிகளால் குத்தியும் அடித்தும் உடைத்து நொருக்கியுள்ளனர். இதேபோல் செய்தி அறைக் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கலன்களில் கொண்டு வந்திருந்த பெற்றோலை செய்தி அறை முழுவதும் தெளித்துள்ள குண்டர்கள் பின்னர் பெற்றோல் குண்டுகள் சிலவற்றை பற்ற வைத்து செய்தி அறைக்குள் வீசி விட்டுத் தப்பிச் செல்லமுயற்சித்துள்ளனர். எனினும் தீ அதிகமாக பரவவே, அங்கிருந்த வெற்றி எவ்.எம்.செய்திப் பிரிவுப் பணியாளர்கள் இருவரையும் வெளியில் இழுத்து வந்து விட்டு விட்டு வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
செய்தி அறை அடித்து உடைக்கப்படும் சத்தம் கேட்டு எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான கட்டிடத் தொகுதியில் இருந்த பணியாளர் அந்தக் கட்டிடத்தின் மின் விநியோகம் முழுவதையும் நிறுத்தியுள்ளார்.
செய்தி அறை கட்டிடத்தொகுதிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பற்றி 119 பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தொலைபேசி மூலம் உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சுமார் 45 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்ததாக வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை சுமார் 6 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் செய்தி அறை மட்டுமே எரிந்து நாசமாகியிருந்தாலும் அதற்கு மேல் மாடிகளில் இருந்த பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் ரி.வி., ஸ்ரூடியோ என்பன புகையினால் பாதிப்படைந்திருப்பதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வெற்றி எவ்.எம். செய்திப் பிரிவின் உதவி செய்தி ஆசிரியர் கே.ரஜினிகாந்த், ஊடகவியலாளர் லெனின் ராஜ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகிய மூவரே காயமடைந்துள்ளனர்.இதில் லெனின் ராஜ் துப்பாக்கியினால் தாக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது அவர் கைகளைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சித்ததில் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் மீது இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு விட்டதாகவும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மட்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடக நிறுவன பணியாளர்கள் கூறினர்.இதேநேரம், இச்சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பி.ஜயகொடி தெரிவித்தார். அத்துடன், சம்பவத்தை அடுத்து வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நன்றி:தினக்குரல்