வவுனியா முகாமிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்ட மக்களை அவர்களின் இடங்களில் மீள்குடியமர படையினர் மறுத்ததால் மீண்டும் அவர்கள் இடைக்கால முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தின் 35 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அவர்களின் இடங்களில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச் செல்லபட்டபோது அப்பகுதியிலுள்ள படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் மீள்குடியேற்றத்தை தடுத்துள்ளனர். இதனையடுத்து அம்மக்கள் தங்களின் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். இம்மக்களை அழைத்துச்சென்ற மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் இடைக்கால முகாமாக இயங்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை தங்க வைத்தனர்.
கிளிநொச்சியில் ஏ-9 பிரதான வீதிக்கு மேற்கே அமைந்துள்ள வறிய மக்கள் வாழும் கிராமம் பொன்னகர் ஆகும். இக்கிராமத்தில் வலுவிழந்தோர் மற்றும், விதவைகளுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஒருவர் அமைத்துக் கொடுத்திருந்தார். அவ்வீட்டுத் திட்டத்தில் குடியிருந்த மக்களே வவுனியா முகாமிலிருந்து மீள்குடியமர்வுக்காக அவர்களின் சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த வீடுகள் விடுதலைப் புலிகளால் அமைக்கபட்டவை என்றும் இவற்றில் குடியமர அனுமதி இல்லை எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளபட்ட சமாதானப் பேச்சுவார்தை காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் கிளிநொச்சிப் பகுதிகளிலுள்ள சில வறிய கிராமங்களில் வீடமைப்புத் திட்டங்களை அமைத்துக் கொடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.