வட மாகாண டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் இன்று ஆரம்பம் – யாழ். நகரசபையில் நிகழ்வு: மன்னாருக்கு விசேட வைத்தியக்குழு

mos.jpgவட மாகாணத்தில் டெங்கு நோய் ஒழிப்பிற்கான தேசிய வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் இதற்கான தேசிய நிகழ்வு இன்று காலை யாழ். மாநகர சபையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இம்மாதம் குறித்த நான்கு நாட்கள் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப் படவுள்ளன. அந்த வகையில் இன்று 02 ஆம் திகதி முதல் வட மாகாணத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி வவுனியா அதிபர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணத்தின் சகல பகுதிகளிலும் அந்தந்த மாவட்டத்திற்குரிய அரச அதிபர் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளிலேயே இன்று டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது ஒப்பீட்டளவில் வடமாகாணத்தில் மிக மிக குறைந்த எண்ணிக்கையானோரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். மன்னாரில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து வவுனியாவிலிருந்து விசேட வைத்தியர் குழுவொன்று மன்னார் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *