வடக்கில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற்செய்கை

வடக்கில் பெரும்போக நெற்செய்கையினை பாரியளவில் முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி திட்டமிட்டு வருவதாக அதன் செயலாளர். எஸ். பி. திவாரட்ன  தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவின் குறித்த பகுதிகளில் காணப்படும் விளைச்சல் நிலங்களை இலக்காகக் கொண்டே இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனக் கூறிய செயலாளர் எஸ். பி. திவாரட்ண, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பமாகவிருக்கும் பெரும்போகத்தில் 75 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து நெல் விளைச்சலை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கு இந்தியா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன உதவ முன்வந்துள்ளன. இதனடிப்படையில், இந்திய அரசாங்கம் பெரும்போகத்திற்கு முன்னர் விளைநிலங்களை உழுவதற்காக 500 ட்ரக்டர் வண்டிகள் மற்றும் நீர் பம்பிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 400 ட்ரக்டர் வண்டிகளையும் நீர்ப் பம்பிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. ட்ரக்டர் வண்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் பழமையான முறையான ஏர் பூட்டும் முறையை கையாளவும் விவசாயிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செயலாளர் எஸ். பி. திவாரட்ன கூறினார்.

மேலும் விவசாய அமைச்சும் உலக விவசாய ஸ்தாபனமும் வட மாகாணத்தின் பெரும்போகத்துக்கென மூன்று இலட்சம் புசல் விதை நெற்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கென போதியளவு உரம் கையிருப்பிலுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் நெல் விளைச்சல் மற்றும் வீடமைப்பு ஆகியவற்றிலேயே வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அதன் செயலாளர், இம்மாத இறுதிக்குள், இந்திய அரசாங்கம் வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியை ஆரம்பிக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *