மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில்வாய்ப்புக்காக செல்லும் இலங்கையரின் பாதுகாப்பு, தொழில் உரிமையைப் பலப்படுத்தும் வகையில் காத்திரமான திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்காவின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், தொழில் வாய்ப்புக்காகச் செல்வோரின் நலன் கருதி முத்தரப்பு உடன்படிக்கை யொன்றை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் ஜே. வி. பி. எம்.பி. அனுர குமார திசாநாயக்க விசேட கவனயீர்ப்புப் பிரேரணையொன்றைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அவர் தமது பிரேரணையில், சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்களாகச் சென்ற 41 பேர் அநாதரவான நிலையில் தொழிலின்றி, சம்பளமின்றி, மருத்துவ சிகிச்சைகளின்றி விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என வினவினார்.
இதற்குப் பதிலளித்த வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸ்; மேற்படி 41 இலங்கையரும் நிறுவனமொன்றின் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. இதற்கிணங்க அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 680 ரியால் சம்பளப் பணமாக வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு பேர் சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வருவதுடன் முதலில் ஒருவரை இலங்கைக்கு அழைத்து வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏனைய ஐவரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்கு மீளதொழில்களைப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்துடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு பணியக உயரதிகாரியொருவர் முன்னிலையில் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையொன் றில் கைச்சாத்திட வேண்டும். இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரதேச மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப் படவுள்ளன. அத்துடன் அவர்களுக்குக் காப்புறுதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது தொழிலுக்காகச் சென்றுள்ள இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் கட்டார், பஹ்ரேன், லிபியா போன்ற நாடுகளுடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் மேற்படி 41 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.