தொண்டமானாறு பாலம் ஊடான செல்வச்சந்நிதி வீதி திறப்பு

tonamanaaru.jpgவட மராட்சி செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு தொண்டமானாறு பாலத்தினூடான வீதி பொது மக்களின் பாவனைக்காக நேற்றுக் காலை திறக்கப்பட்டது. செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. இம் மகோற்சவம் 24 ஆம் திகதி வரை நடைபெறும்.

கடந்த மூன்றாம் திகதி செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்த போது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு கிடந்த தொண்டமானாறு பாலம் ஊடான வீதியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு இப் பகுதி மக்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கமைய அமைச்சர் யாழ் கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுடன் பேச்சு நடத்தியதன் பயனாக நேற்று இப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பருத்தித்துறை – யாழ்ப்பாண பிரதான நெடுஞ்சாலை வீதி அகலப்படுத்தும் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்ற இவ் வேளையில் வல்லைப் பாலமும் அகலப்படுத்தும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இதனால் வல்லைப் பாலத்தினூடான போக்குவரத்து மிகவும் சிரமமானதாகக் காணப்படுகிறது. எனவே வலிகாமம் யாழ்ப்பாணம் மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அச்சுவேலியிலிருந்து-வறணம், -கதிரிப்பாய்ச் சந்தி, தம்பாலைச்சந்தி, காத்தாடிச்சந்தி ஊடாக தொண்டை மானாறு பாலம் வழியாக செல்வச்சந்நிதி முருகன் கோவிலை வந்தடையலாம்.

அத்துடன் தென்னிலங்கையிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவ்வீதி திறந்து வைக்கப்படுவதால் பக்தர்களின் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டு இலகுவாகிவிடும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாதையை ஈ. பி. டி. பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரனும் தொண்டமானாறு பிரதேச இராணுவக் கப்டனும் இணைந்து பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Vishva
    Vishva

    தொண்டைமானாறு – அச்சுவேலி வீதி 30 வருடங்களின் பின் திறப்பு!

    தொண்டைமானாறு செவ்வச்சந்நிதி ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கடந்த 30 வருடங்களாக மூடப்பட்டிருந்த தொண்டைமானாறு- அச்சவேலி வீதி திறக்கப்பட்டுள்ளது. வடக்கில் பிரசித்திபெற்ற இவ்வாலய உற்சவத்திற்கு இம்முறை தென்பகுதிகளிலிருந்தும் அதிகளவான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்மக்களின் போக்குவரத்து வசதிகளை முன்னிட்டே இப்பாதை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் முதலானோர் இவ்வீதி திறக்கப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் அமைச்சர் பலாலி படைத்தரப்புடன் தொடர்புகொண்டு இவ்வீதியை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    Reply