சங்ககார,மலிங்க,மெண்டிஸ் சாதனை

இலங்கை – இந்திய அணிகளிடையே கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்டின் 3 ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் சங்கக்கார,மலிங்க மற்றும் மெண்டிஸ் சாதனை படைத்துள்ளனர்.

*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8 ஆயிரம்ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற சிறப்பை இலங்கை அணியின் கப்டன் சங்காகார பெற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் 12 ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்டில் அவரது ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தொட்டது.அவர் தனது 152 ஆவது இனிங்ஸில் (91 ஆவது டெஸ்ட்) இந்த இலக்கை எட்டியுள்ளார்.

இதற்கு முன்பு இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 2002 ஆம் ஆண்டு தனது 154 ஆவது இனிங்ஸில் (96 டெஸ்ட்) 8 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்ததே இந்த இலக்கை வேகமாகக் கடந்த வீரரின் சாதனையாக இருந்தது. அதனை சங்கக்கார முறியடித்தார். இலங்கை வீரர்களில் மஹேல ஜெயவர்தனவுக்கு (9403 ஓட்டங்கள்) பிறகு 8 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் சங்கக்கார ஆவார்.

* இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்க,சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டைக் கைப்பற்றியபோது அது அவரது 100 ஆவது விக்கெட்டாக (30 டெஸ்ட்) அமைந்தது. இலங்கை வீரர்களில் முரளிதரன் (800 விக்கெட்),சமிந்தவாஸ் (355 விக்கெட்) ஆகியோர் மட்டுமே டெஸ்டில் இதற்கு முன்பு 100 விக்கெட்டுகளை கடந்துள்ளனர்.

* 2 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸின் விக்கெட் எண்ணிக்கை 50 ஐ தொட்டது. தனது 12 ஆவது டெஸ்டில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட மெண்டிஸ்,குறைந்த டெஸ்டில் 50 விக்கெட் வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு முரளிதரன்,வாஸ் ஆகியோர் தங்களது 13 ஆவது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *