மெக்ஸிக்கோவில் பெட்டி இணைக்கப்பட்ட வாகனமொன்றில் உடலில் நீர்வரட்சியேற்பட்ட மோசமான நிலைமையில் இலங்கையர்கள் உட்பட 76 குடியேற்றவாசிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.மெக்ஸிக்கோவின் தென் கிழக்கு மாநிலமான சியாபாஸில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பெட்டி இணைக்கப்பட்ட வாகனத்திலேயே இலங்கை மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் 76 பேர் மீட்கப்பட்டனர்.
இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லையென உத்தியோகபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி லத்தீன் அமெரிக்கா ஹெல்ட் ரிபியூன் தெரிவித்தது. இந்த வாகனம் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
28 அடி நீளமும் 10 அடி அகலமுள்ள இந்த வாகனத்திற்குள் இருந்த 76 குடியேற்றவாசிகளின் நிலைமை தொடர்பாக இனந்தெரியாத செய்தியொன்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. உடலில் நீர் வரட்சியுடன் அவர்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாக தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென நிரூபிக்கும் அத்தாட்சி எதனையும் அந்தக் குடியேற்றவாசிகள் கொண்டிருக்கவில்லை. குவாட்டமாலா, ஸிசல்வடோர்,ஹொன்ரோஸ், இலங்கை ஆகிய நாடுகளைத் தாங்கள் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, எத்தனை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.