யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள விவசாயக் காணிகளில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி cவிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பிரதான தொழிலாகவும், குடாநாட்டு பொருளதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்வது விவசாயம் ஆகும். போரின் காரணமாக மிக நீண்டகாலமாக யாழ்.குடாநாட்டில் விவசாயம் நலிவுற்றுள்ளது. தற்போது போர் முடிவுற்ற நிலையிலும் பல விவசாயக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் சிக்கியிருக்கின்றன.
உயர்பாதுகாப்பு வலயத்தில் தங்களின் ஊர்களை இழந்தவர்கள் இன்னமும் அகதிகளாகவே அவல வாழ்க்கை வாழ்கின்றனர். போரின் பின் ஏனைய இடங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையிலும் குறித்த மக்கள் மட்டுமே இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர். இந்த மக்களின் வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் வயற்காணிகளில் மக்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அத்துடன் குடாநாட்டில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவும் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரின் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து விரைவில் நிறைவேற்றுவதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி ஹத்துருசிங்கா உறுதியளித்துள்ளார் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.