மேர்வின் சில்வாவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அவரின் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதன் மூலம் ஜனாதிபதி துணிச்சலாகச் செயற்பட்டிருப்பதாக சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் பாராட்டியுள்ளது.
சமுர்த்தி அதிகாரியொருவரை மரத்தில் கட்டிய மேர்வின் சில்வாவுக்கு ஜனாதிபதி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததற்காக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத்குமார பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கையெடுத்ததன் மூலம் தமக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தால் கூட பொறுப்பற்ற விதத்தில் எவராவது செயற்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை ஜனாதிபதி நிரூபித்துள்ளார் என்று ஜகத்குமார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
சமுர்த்தி அதிகாரிகள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படவில்லை. அமைச்சருக்கு எதிராக மட்டுமே ஆர்ப்பாட்டங்களை அவர்கள் மேற்கொண்டனர். டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றுவதை ஒருபோதும் அதிகாரிகள் வாபஸ்பெறப் போவதில்லை. இதற்குத் தொடர்ந்தும் அவர்கள் ஆதரவளிப்பார்கள். சட்டத்தை தமது கையிலெடுத்துக் கொள்வோருக்கு இது சிறந்த படிப்பினையாகும்.இந்தச் சம்பவத்தால் மேர்வின் சில்வா தனது நடத்தையைச் சிறப்பான முறையில் மாற்றிக்கொள்வார் என்றும் ஜகத்குமார கூறினார்.