”பிரபாகரன் கையெழுத்துக் காட்டி நிதி திரட்டுகின்றனர்.” தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பிரபாகரனின் கையெழுத்துடனான ஆவணங்களைக் காட்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நிதி சேகரித்து வருவதாக சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேணாட் குணதிலக தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி அவர் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்தைகள் நடைபெற்ற போது தாம் அதில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அதன் முதலாவது விசாரணையை நேற்று கொழும்பில் உள்ள லக்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகளுக்கும் ஆய்வுகளுக்குமான நிலையத்தில் தொடக்கி வைத்தது. எதிர்வரும் காலங்களில் பல முக்கியஸ்தர்கள் இவ்வாணைக்குழுவில் சாட்சியங்களை அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாகவும், 25ம் திகதி அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் சாட்சியமளிப்பர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் யுத்தக்குற்றங்களுக்கான விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *