இலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்” என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று ஆகஸ்ட் 15. 2010 இல் இடம்பெற்றது. இத்துறைமுகம் ‘தெற்காசியாவின் ஆழமான துறைமுகம்’ எனவும் கருதப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய’களப்பின் ஒரு பகுதியைச் சூழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் கிழக்கிலிருந்து மேற்காக 14 கிலோ மீற்றர்களைக் கொண்ட இரு அலை தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கப்பல்கள் மூலம் ஆழமாக்கப்பட்டு அங்கிருந்து புதிய துறைமுகத்துக்குள் தண்ணீர் நிரப்பப்பகிடுகின்றன.
இத்துறைமுக முதல்கட்ட நிர்மாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி சீனக் கப்பல் பொருளியல் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. 39 மாதத்தில் நிறைவு செய்யப்படவிருந்த இத்திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளுர் பொருளியலாளர்களின் ஒத்துழைப்புடன் 30 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை முதல் கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்ஸிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்துள்ளதோடு நவம்பர் மாதம் முதல்கட்டம் நிறைவுபெறும் போது இரண்டாம்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச துறைமுக கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல இத்துறை முகத்தை வரிகளற்ற ஒரு தொழில் நுட்ப துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் டென்மார்க் ரெம்போல் கம்பனியின் வளப்பங்களிப்புடன் 2005 ஆம் ஆண்டில் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்தின் நில அளவு 2000 ஹெக்டயார்
ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பு (முதற்கட்டம்)
* துறைமுக நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பம் 2008 ஜனவரி 15 முதற்கட்டவேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட தினம் : 2010 ஆகஸ்ட் 15
*. மேற்கு நீர்தடுப்புச் சுவர் 988 மீட்டர்
* கிழக்கு நீர்தடுப்புச் சுவர் 312 மீட்டர்
* கப்பல் முனையம் 600 மீட்டர்
* சேவைகள் நடைபெறும் முனையம் 105 மீட்டர்
* எண்ணெய் முனையம் 310 மீட்டர்
*. கப்பல் திசை திருப்பும் தடாகம் 600 மீட்டர்
* தடாகத்தின் ஆழம் 17 மீட்டர்
* துறைமுக உட்புகு கால்வாயின் அகலம் 210 மீட்டர்
*. துறைமுக உட்புகு கால்வாயின் ஆழம் 17 மீட்டர்
* முதல் கட்டத்தில் ஆழமாக்கப்பட்ட நில அளவு 43 ஹெக்டயார்
* கொள்ளளவு 100,000 DWT அளவினையுடைய கப்பல்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
* எண்ணெய் முனையம், ஆரம்பம் 07.10.2009, ஆகு செலவு 76 மில்லியன், அமெரிக்க டொலர்கள், நிர்மாணிப்புக் கம்பனி சீன ஹவான் கிவ் (HUWAN QUI) இஞ்சினியரிங்.
* எண்ணெய்த் தாங்கிகளைக் கொண்ட தொகுதியொன்று நிர்மாணிக்கப்படுகிறது. அதன் மொத்தக் கொள்ளளவு 80000 m3.
* கப்பல் எரிபொருள் தாங்கிகள் 08
* விமான எரிபொருள் தாங்கிகள் 03
* L. P. வாயு தாங்கிகள் 03 (திரவ பெற்றோலிய வாயு)
* நிர்வாகக் கட்டடம், ஆரம்பம் 2009.10.07, நிர்மாணிப்பு சைனா ஹாபர் இஞ்சினியரிங் மற்றும் ஸைனோ ஹயிட்ரோ கோபரேஸன். 75000 சதுர அடியைக் கொண்ட 15 மாடிகளையுடைய 200 அடி உயரமான கட்டடமாகும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் சேவைகள்.
* பொதுவான கப்பல் சரக்குகள் எனும் சம்பிரதாய கப்பல் சரக்குகள் (சிமெந்து, உரம், மா,இரும்பு, பலகை போன்றன)
* Raw வசதிகள் – வாகன போக்குவரத்து வசதிகள், கப்பலின் இயக்கச் செயற்பாடுகள் (இறக்குமதி / மீள்ஏற்றுமதி)
* கப்பல் நிறுத்துமிட வசதிகளை அளித்தல்.
* கப்பல்களுக்கான மரக்கறி உட்பட உணவுப் பொருட்களை (Ship Stores) வழங்குதல், மருத்துவ வசதியினை வழங்குதல்.
* நீர் வழங்கல்
* கப்பல் பணியாளர்களை வழங்குதல், பணியாளர் பரிமாற்று மத்திய நிலையமாக செயற்படல்.
* கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல் (Dry Doc)
* நடவடிக்கைகளுக்கு உலர் தடாக வசதிகளினை வழங்குதல்.
* துறைமுக வளாகத்தினுள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான வசதிகளை அளித்தல்.
* கொள்கலன் கையாளும் முனையம் உருவாக்குதல். நிலக்கரி, மின் உற்பத்தி பயன்பாடு தொடர்பில் வசதி அளித்தல்.
எதிர்பார்க்கப்படும் இலக்குகள்.
ஹம்பாந்தோட்டை துறைமுகமூடாக உள்நாடு, சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பின்வருமாறு.
சர்வதேச இலக்குகள்.
* இலங்கையை உலகில் முன்னணி கப்பல் மத்திய நிலையமாக மாற்றுதல்.
* கப்பல் துறை பற்றி வலய மட்டத்தில் மேல் எழும் சவால்களுக்கு துணிச்சலுடன் முகங்கொடுத்தல்.
* இலங்கை கடல் வலயத்திலிருந்து கிடைக்கப்பெறும் பாரிய அந்நிய நாட்டுச் செலாவணியை இலங்கை பொருளாதாரத்தின் மீது கவரவைத்தல்.
* வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தல்.
தேசிய இலக்குகள்.
* வெளிநாட்டு செலாவணியை நாட்டினுள் கொண்டு வருதல்.
* தொழிலில்லா பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
* 25000 – 30000 அளவிலான சுற்றாக தொழில் வாய்ப்புகள் உருவாதலினால் பிரதேசத்தின் நிதிப் புழக்கம் அதிகரித்தல்.
* பயிற்சி தொழில் முயற்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல்.
* பிரதேச அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
* பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.
* அரச ஆதாயத்தினை கூட்டுதல், புது நிதி கிடைக்கும் வழிமுறைகள் உருவாதல்
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டம்.
ஹம்பந்தோட்டை கரகங்லேவாய சுற்றுப் புறத்தில் 450 குடும்பங்கள் வசிக்கின்றன. 2000 ஹெக்டயார் காணி துறைமுகத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவு மற்றும் மாற்று நிலங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் துறைமுக அதிகார சபையினால் செய்து கொடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை கரகங்லேவாய பழைய பாதைக்கு பதிலாக புதுப்பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டதுடன் துறைமுக அடிப்படை அமைவிடம் தொடர்பான சகல இடர்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. பிரதேச மக்களுக்கு திட்டம் பற்றியும் சகல பிரிவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. விசேடமாக பிரதேச பாடசாலைகள் ஊடாக நடத்தப்பட்ட துறைமுகம் பற்றிய கருத்தரங்கு அபிவிருத்தியின் நேர் சிந்தனையின் பால் ஹம்பாந்தோட்டை மக்களை கவரச் செய்துள்ளது.
உலக வரைபடத்தினை அவதானிக்கும் போது இலங்கையின் அமைவிடம் ஒரு முக்கிய கேந்திர இடத்தில் அமைந்துள்ளது. கடுகு சிறிதாயினும் காரம் பெரிது என்பது போல எமது நாடு சிறியதாயினும் சகல வளங்களும் மிக்க ஒரு நாடாக விளங்குகிறது.
உலக கடற் போக்குவரத்துத் துறையினை விரிவாக ஆராயும் போது ஏறக்குறைய 34,000 வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கை நாட்டை சுற்றிச் செல்வதை நாம் காண்கின்றோம். எமது கண்தூரத்திற்கு அருகாமையில் எமது நாட்டை தவிர்ந்து செல்லும் இக்கப்பல்களில் ஏறக்குறைய 10,000 கப்பல்கள் மட்டுமே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றன.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் திறக்கப்பட்டதும் பெரும்பாலான கப்பல்கள் இத்துறைமுகத்தை அண்மித்தே தமது பயணத்தை மேற்கொள்ளும். அப்போது இக்கப்பல்கள் இத்துறைமுகத்தை வந்து அடைவது இலகுவானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் என்பதை நாம் கப்பல் போக்குவரத்து வரைபடத்தை அவதானித்தால் புரியும்.
தகவல்: இலங்கை துறைமுக அதிகார சபை
BC
சுவாரசியமான தகவல்.நன்றி.
lio
இந்த துறைமுக திறப்புவிழாவில் இலங்கையில் தமிழர்கள் முஸ்லீம் மக்கள் உள்ளநாடு என்பதை கரத்தில் அரசு கவனமெடுக்கவில்லை என்பதை திறப்பு விழாவின் நிகழ்வில் அவதானிக்கமுடிந்தத அரசு இலங்கையின் அரசியல் பிரச்சினையில் எப்படி கவனமாக உள்ளதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.