இராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி நிலை, பதக்கங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பனவற்றை நீக்க இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவிருப்பதாக சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பி.அநுரகுமார திசாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இராணுவ தளபதியாகவும் அதனைத் தொடர்ந்து கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்து பின்னர் ஓய்வு பெற்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியினரின் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள (தற்போதையை) இராணுவ தளபதியின் பரிந்துரையின் பேரில் முப்படைத் தளபதி என்றவகையில் ஜனாதிபதியினால் இரு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டன.
இதில் இராணுவ சேவையில் இருந்த காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்த 3 குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முதலாவது இராணுவ நீதிமன்றமும் இராணுவ சட்டத்தை மீறி மோசடியான முறையில் இராணுவ உபகரண கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதான 4 குற்றச்சாட்டுகள் பற்றிவிசாரிக்க இரண்டாவது இராணுவ நீதிமன்றமும் நியமிக்கப்பட்டன.
இதன் பிரகாரம் முதலாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகா குற்றவாளியென கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது. இதன்மூலம் அவர் 40 வருட இராணுவ சேவையில் பெற்றிருந்த பதவிநிலை, பதக்கங்கள், விருதுகள் போன்றவற்றையும் அவற்றுடன் அரசாங்கத்தின் ஓய்வூதியம் ஜெனரல் பட்டத்தை பயன்படுத்துவதற்கான உரிமையையும் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுநாள் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தார்.