சரத் பொன்சேகாவுக்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பும் எதிரணியும் கடுமையாகத் தர்க்கித்ததால் பெரும் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து சபை அலுவல்கள் 5 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.
பாராளுமன்றம் நேற்றுக்காலை செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்று அதன்பின்னர் குடியியல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. நீதியமைச்சர் அதாவுடசெனவிரட்ன விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தினார்.
ரணில் விக்கிரமசிங்க தனதுரையில், சரத்பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பாக தனது கருத்துகளையும விளக்கங்களையும் கண்டனங்களையும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தவுடன் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.அநுரகுமார திசாநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். இதற்கு அப்போது சபைக்குத் தலைமைதாங்கிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அனுமதி வழங்கினார். இதையடுத்து அநுரகுமார திசாநாயக்க தனது பிரச்சினையை முன்வைத்தபோது அது ஒழுங்குப் பிரச்சினையல்லவெனக் கூறிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அமைச்சர் பீரிஸை உரையாற்ற அழைத்தார். ஆனால் பீரிஸைப் பேச விடாது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.
அப்போது எழுந்த அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன சபாநாயகரின் தீர்ப்பு சரியோ பிழையோ அதனை விமர்சனத்துக்குள்ளாக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து பீரிஸ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான வகையில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிரணியினர் சபையில் விமர்சித்தனர் இராணுவ நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விமர்சிப்பதற்கு தனியான பிரேரணை சபைக்குக் கொண்டுவரப்படுவது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இராணுவ நீதிமன்றம் மற்றும் அதன் நீதிபதிகள், தொடர்பாக சபையில் எதிரணியினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணானது. இராணுவ நீதிமன்ற ஏற்பாடும் எமது அரசியல் யாப்பில் உள்ளதே. இராணுவ, கடற்படை கட்டமைப்புக்களின் சட்ட ஏற்பாடுகள் இன்று, நேற்று உருவாக்கப் பட்டவை அல்ல மாறாக அவை 1948ல் ஏற்படுத்தப்பட்டவை.
நாம் ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிர்தரப்பில் இருந்தாலும் அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் ஏற்ப செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம். நீதிபதிகளை விமர்சிக்க முடியாது என்று நான் கூறவில்லை. அதற்கும் ஒழுங்கு உள்ளது அந்த ஒழுங்கு இங்கு மீறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 78வது பிரிவு தனியே நீதிபதிகள் குறித்து பேசவில்லை, மாறாக நீதித்துறையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய விரிவான விடயம் நீதிமன்றங்கள், தொழில் மன்றுகள் என்பன இலங்கை சட்டத்திற்குள் உட்பட்டவையே. அதனுள் இராணுவ நீதிமன்றமும் அடங்கும்.
இராணுவ நீதி மன்றத்திற்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற தீர்ப்புக்களை கூட வழங்க அதிகார முள்ளது. அதனால் அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான எதிரணியினரின் உரைகள் பாராளுமன்ற ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படுவது அவசியம்.
PALLI
//இராணுவ நீதி மன்றத்திற்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற தீர்ப்புக்களை கூட வழங்க அதிகார முள்ளது. அதனால் அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான எதிரணியினரின் உரைகள் பாராளுமன்ற ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படுவது அவசியம்.//
ஏன் உங்கள் தேவைகருதி அவர்களை நாட்டை விட்டு கூட அகற்றலாம் தப்பே இல்லை இது மகிந்தா ஆட்சியல்லவா?? நீங்கள் அவர் சேவகர்கள்தானே பாராளமன்றம் அவர்களது அரன்மனையா அல்லது அந்தபுறமா??