ஜெனரல் சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவம் மீது எச்சில் துப்பும் தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் திருத்தச் சட்ட பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா தற்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளார். இவ்வாறான நிலையில் அரசினாலும் இராணுவ நீதிமன்றத்தினாலும் அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து முறையாக அறிவித்து பதவி விலகிய பின்பே அரசியலில் ஈடுபட்டார். இராணுவ சேவையிலுள்ள ஒருவர் அரசியலில் ஈடுபடவோ தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்றுதான் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர இராணுவ சேவையிலிருந்து விலகிய ஒருவர் போட்டியிடக் கூடாதெனக் கூறப்படவில்லை. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான சட்டவாக்கத்தில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஆனால் இங்குள்ள நிலைமை என்னவென்பது கேள்விக்குறியாகவுள்ளது.
சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புகொண்டிருந்ததாக இராணு நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகார பொய் கூறினார். இந்தப் பொய்யை இராணுவ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், சரத் பொன்சேகா மீது தேசத்துரோகம், சதித்திட்டம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதானி என்ற பதவியை 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியும் அறிவித்தார்.
அன்றைய காலகட்டத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா, பொதுத்தேர்தலா என்ற எந்த அறிவிப்பையும் அரசு விடுக்காதிருந்தது. இதனால் நாமும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தாமதத்தை ஏற்படுத்தினோம். இது தொடர்பில் அப்போது நாம் எதனையும் கூறவில்லை.
இந்நிலையில் அதே மாதம் 26ஆம் திகதி நடந்த கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பதென எமது கட்சித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பேரிலேயே நாம் சரத் பொன்சேகாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினோம். அச்சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் எந்தப் பதவியிலும் இருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் ஜெனரல் பொன்சேகா எமது கட்சியுடன் தொடர்புகொண்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகாரவினால் கூறப்பட்ட பொய்யை ஏற்றுக்கொண்ட இராணுவ நீதிமன்றம் பொன்சேகாவின் பதவிகளையும் பதக்கங்களையும் பறித்ததுடன் அவரது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் விடயத்தில் உண்மையான நிலையினை கண்டறியாத இராணுவ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் இந்நாட்டின் இராணுவம் மீது எச்சில் துப்பப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா சி.டி.எம்.ஏ. தொலைபேசியூடாக தொடர்புகொண்டு பேசியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார். அப்படியானால் அதில் பதிவு செய்யப்பட்ட குரல் சரத் பொன்சேகாவினுடையதுதானா என இராணுவ நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகா மீது எப்படி இந்தத் தீர்ப்பினை வழங்க முடியும்?
பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. சரத் பொன்சேகாவின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டமையானது ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கான ஒரு ஆரம்பமாகவேயுள்ளது.
இங்கு ஒருவர் பிரபாகரன் போல் நடக்கின்றார். பிரபாகரன் தனது தளபதி மாத்தயாவை கூண்டில் அடைத்து பின்னர் கொலை செய்தார். அதேபோன்று தற்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினையாகும். இது தொடர்பிலான விசாரணைகள் போலியாக அமையாமல் அதனை இந்தச் சபையில் விவாதிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படவேண்டும். அத்துடன், பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் அனைத்து வழக்கு விசாரணைகளின் அறிக்கைகளையும் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.