மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை நிர்மாணம்: இலங்கை – இந்திய அரசுகள் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

medawachchiya-talai-manar.jpgஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 230 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் வடக்கில் மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையில் அமைக்கப்படவுள்ள ரயில் பாதை நிர்மாணம் தொடர்பான ஒப்பந்தக் கைச்சாத்து நேற்று கொழும்பில் இடம்பெற்றது அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து அமைச்சில் வைத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்திய அரசின் சார்பில் இர்கோன் நிறுவன பொது முகாமையாளர் குப்தாவும் இலங்கை அரசின் சார்பில் ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் காங்கேசன்துறை – தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதை, மடு, தலைமன்னார், பளை ஊடான ரயில் பதைகளை விரைவில் புனரமைப்பது தொடர்பிலும் இரு அரசாங்கங்களினதும் முக்கியஸ்தர்களுக்கிடையில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்படி சகல ரயில் பாதைகளையும் எதிர் வரும் 2 வருட காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப் பட்டன.

மதவாச்சி – தலைமன்னாருக்கிடையிலான 110 கிலோ மீற்றர் ரயில் பாதையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கென 7350 மில்லியன் ரூபாவும் மடு – தலைமன்னாருக்கிடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்கென 172.20 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன.

இதேவேளை; வடக்கின் ரயில் பாதை நிர்மாணம் இடம்பெறும் சமகாலத்தில் மாத்தறை – கதிர்காமம் ரயில் பாதை நிர்மாணப் பணிகளும் இடம்பெறுமென அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். அத்துடன் மாத்தறை – பெலியத்தை ரயில் பாதை நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் மாத்தறை – கொழும்பு ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *