இங்கி லாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் ஆட்டத்தில் முகமது அமிர், சயீத் அஜ்மல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இங்கிலாந்து வீரர் அலாஸ்டர் குக்கின் சதம் விழலுக்கு இறைத்த நீரானது. முன்னதாக இங்கிலாந்து பாகிஸ்தான் தங்களது முதல் இன்னிங்ஸில் முறையே 233 மற்றும் 308 ஓட்டங்கள் எடுத்திருந்தன.
இந்நிலையில், வெள்ளிக் கிழமை தனது இரண்டாவது இன்னிங் ஸைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் அலாஸ்டர் குக் மட்டும் சிறப்பாக ஆடி 110 ஓட்டங்களை குவித் தார். பீட்டர்சன் (23), டிராட் (36) ஆகியோர் குறிப்பிடும் படியான ஓட்டங்களை எடுத்தனர்.
கொலிங்வுட் (3), மோர்கன் (5), பிரையார் (5), ஸ்வான் (6), பிராட் (6) என வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சோதனையாக முடிந்தது.
148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தனது 2 வது இன்னிங்ஸைத் தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணியின் சல்மான் பட் (56), இம்ரான் பர்கத் (33), முகமது யூசுப் (33) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 41.4 வது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது பாகிஸ்தான்.
இதை அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்றது அந்த அணி (1 – 2). 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது அமிர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் 4 வது நாளிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.