முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வரும்போது புர்கா,ஹிஜாப் ஆகிய ஆடைகளை அணியக்கூடாதென அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை அவுஸ்திரேலியாவை பொறுத்த வரை இதுவே முதற் தடவையாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த தன்சிமா 36 என்ற பெண் ஏழு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.
அண்மையில் இப்பெண் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வருகையில் புர்கா ஆடை அணிந்துகொண்டு வந்தார். இதை அகற்றிவிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அப்பெண் தர்மசங்கடமான நிலைக்குள்ளானார்.
இவ்வாறானதொரு தடை அவுஸ்திரேலியாவில் பிறப்பிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இப்பெண் சார்பாக வாதாடிய சட்டத்தரணி இதை நிராகரித்தார். 17 வயது முதல் தன்சிமா புர்கா அணிந்து வருகிறார். இதை முஸ்லிம் பெண்கள் கெளரவமான ஆடையாகக் கருதுகின்றனர். எனவே நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானதல்ல எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி, புர்கா மத ஆடையல்ல. அது கலாசார ஆடையே. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் புர்கா ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் நீதிமன்ற வளாகமும் ஒன்று. முகத்தை முற்றாக மூடிய நிலையில் சாட்சியமளிக்கப்படுகையில் முகத்தின் அபிநயத்தை கண்டுகொள்ள முடியாதுள்ளது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் புர்கா ஹிஜாப் களையப்படவேண்டுமென்றார். இவ்விடயம் அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.