அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முற்பகுதியில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஆளுந்தரப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.எனினும் எவ்வாறான திருத்தங்கள் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்படப்போகின்றன என்பது பற்றிய விடயங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறிருப்பினும் அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சில சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்தனர்.அது மட்டுமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைக்குக் கொண்டுவரப்போவதாகக் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுங்கட்சி அறிவித்திருந்தது.
அதுவும் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் இதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை இந்த வருடத்திற்குள்ளேயே கொண்டு வந்து விட முடியுமென்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.எவ்வாறிருப்பினும் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டு வருவது பற்றிய பேச்சுகள் தற்போது நிறைவடைந்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாது அண்மையில் எதிரணியில் இருந்து இரு எம்.பி.க்கள் ஆளுந்தரப்பிற்குத் தாவியதால் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்திருக்கிறது.இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அடுத்த மாத முற்பகுதியில் அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான முஸ்தீபுகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் போது அதை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டிக்கொள்வதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.