Tuesday, August 3, 2021

‘மழை நதி கடல்’ கவிதைநூல் ஓர் அறிமுகம் – சாமஸ்ரீ : எஸ்.எல். மன்சூர் (கல்விமாணி) – அட்டாளைச்சேனை.

Iniyavan_Isarudeenநூலின் பெயர் : மழை நதி கடல் (கவிதை)
நூல் ஆசிரியர் : இனியவன் இஸாறுதீன்.
உரிமை : முஃப்லிஹா இஸாறுதீன்
வெளியீடு : எழுவான் வெளியீட்டகம்.
விலை : 400ரூபாய்

இயற்கையுடன் இரண்டறக்கலந்ததுதான் மனிதவாழ்க்கை. அந்த இயற்கையை மனிதன் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்திக் கொண்டேயிருக்கின்றான். இவ்வாறான இயற்கையின் இன்பதுன்பங்களை வாழ்வின் நெருக்கத்தோடு கவிஞர்கள் தங்களது ஞானதிருஷ்டியினால் செய்யுள்களாக வடிப்பர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன் கவிஞர்கள் தங்களது கண்ணுக்குள் தெரியும் இயற்கையின் உள்ளக்கிடங்கினை இவ்வாறு நயத்துடன் வடிக்கின்றபோது அவை மனித உள்ளங்களுக்கு சற்று ஆறுதலை அழிப்பதுடன் கவிஞனும் இயற்கைக்கு உதவுமாற்றலை பெறுகின்றான். அந்தவகையில் இலங்கையில் தென்கிழக்கு வட்டாரத்திலிலுள்ள அட்டாளைச்சேனையிலிருந்து “இனியவன் இஸாறுதீன்” என்றொரு இளைய கவிஞன் புதுக்கவிதைகளை வரைந்து “மழை நதி கடல்” என்கின்ற பெயரில் எழுவான் வெளியீட்டகத்தின் துணைகொண்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளமை நவீன இலக்கியத்தின் மீதுள்ள இயற்கையின் பற்றை பறைசாற்றி நிற்கின்றது.

‘இரசிகமானவன் நீ
என்னைத் தாங்கும் உன் வேர்கள்
எங்கெங்கு உண்டென்று என் கிளைகளுக்கும் தெரியாது
என் இலைகளுக்கும் தெரியாது’

என்றொரு கவிதையை ‘இறைவா உன்னிடம்’ எனும் தலைப்பில் இயற்கையின் அருட்கொடைக்கு ஒப்புவிப்பதானது அற்புதமானதோர் பரவசத்தை ஏற்படுத்திவிடுகின்றது. இதேபோன்று இந்நூல் வாயிலாக 91 கவிதைகளை 318 பக்கங்களில் வடித்துள்ளார் கவிஞர். தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்;ட நெழிவு சுழிவுகளையும், இயற்கையின் நடத்தைக்கோலத்தையும் நன்கு இரசித்து, புசித்து, அனுபவித்து யாத்துள்ள இக்கவி முத்துக்களை அழகுற வடிவமைத்துள்ள பாணியோ எவரையும் படிக்கத் தூண்டும் கவிதைப்புனல்களாகவே காணப்படுவதுடன், ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு கவிதைகளின் உள்ளார்ந்தமான கருத்துக்களை ஆழமாக அறிகிறபோது இப்படியொரு கவிஞன் எம்மத்தியில் இருக்கின்றானா? என்பதையே சிந்திக்க வைக்கின்றன.

MAZHAI_NATHI_KADAL_BookCoverவிசேடமாக கூறப்போனால் ‘மணமங்கைக்கு, காதலித்துப்பார், காமத்திடம் பேசும் காதல்’ போன்ற காதல் கவிதைகளும், உறவுகளான ‘உம்மா, தாய், தமிழாசிரியருக்கு எழுதிய கவிதைகளும்’, இயற்கையின் எழிலுக்கு மெருகூட்டக் காரணமான உயிர் ஜென்மமான ‘மண்புழுக்களே, சுமைதாங்கி, சிலந்தியுடன் ஒரு செவ்வி, எறும்புகள் ராச்சியம்’ போன்ற கவிதைகளும், ‘மரம், பூக்கள், வேர்கள், முட்கள், மூங்கில்கள், மவுனம், புல்வெளி’ போன்ற இயற்கைத் தாவரப்பகுதிகளுடனும், ‘மேகமே மேகமே, விடியல், தண்ணீர், மழை, நதி, கடல், காற்று, நட்சத்திர பயணம்’ போன்ற இயற்கையின் அருட்கொடைகளுடனும் தனது கவிநடையைப் புனைந்து யுத்தத்திற்கு சாவுமணியடிக்கும் துப்பாக்கிக்கும், சமாதானத்திற்கு சாந்தமாய் தேசத்திற்கொரு தூது விட்டு, இறுதியில் ‘ஈழம்? | என்றொரு தலைப்பில் “வளமான நிலம் – அழகான பூவனம் – அருமையான நூல்கள் – அற்புதமான பள்ளிக்கூடங்கள் – அறிவுஜீவிகள் – ஆயுதம் சுமக்கும் அராஜவாதிகள்” என்று தொடர்கின்ற கவிதை சொல்லும் பாடம் மனிதநேயத்தில் எம்மைப் புல்லரிக்க வைக்கின்றது.

“எல்லாத்தீயிலும் என் ஆன்மா” என்றொரு தலைப்பில் வருகின்ற கவிதையில் கவிஞரோ ஆத்மாவுடன் இவ்வாறு பேசுகின்றார். “ஆதிக்கத்தீயில் எரிந்தேன் அது என்னை கருகிய தகரம்போல் துருவேற்றி விட்டது, ஆணவத்தீயில் எரிந்தேன் அது என்னை உருகிய ஈயம்போல் உருக்குலைத்து விட்டது, பசித்தீயில் எரிந்தேன் அது என்னை பழுத்த இரும்புபோல் வளைத்தெடுத்து விட்டது, பொறாமைத் தீயில் எரிந்தேன் அது என்னை புகைந்த சிகரெட்போல் பொசிக்கி விட்டது, காமத்தீயில் எரிந்தேன் அது என்னை ருசியில்லாத வெறும் கறியாக்கி விட்டது” என்று இன்னும் எரிக்க என்னில் என்ன இருக்கிறது’ என்று வெற்றுடல் கேட்பதுபோல் வரும் இக்கவிதை ஒவ்வொரு மனிதனையும் ஆத்மார்த்தமாக சிந்திக்க வைக்கிறது.

‘கலீல் ஜிப்ரானே’ என்றொரு தலைப்பில் வரும் உலமகா கவிஞனின் “முறிந்த சிறகுகள்” கவிதையிலிருந்து பிறந்த ஒரு கவிதையாக “உன் முறிந்த சிறகுகளைப் படித்த பிறகுதான் எனக்குச் சிறகிருப்பதே என் சிந்தைக்கு வந்தது” என்று கூறி “பூவிதழில் பனித்துளியால் எழுதிய படிமக்காரனே” என்றும் கலீல் ஜிப்ரானை வர்ணிக்கும் கவிதைகளோ அபாரம். ‘அழைப்பு’ என்றொரு தலைப்பில் ‘மகாகவி பாரதிக்கு’ இப்படி புகழாரம் சூட்டுகின்றார் இனியவன் இஸாறுதீன். “புரட்சிப்புய மேந்தி எழுச்சிப் பாக்களால் போராடிய உயர்ந்த ஆத்மாவே, உன்னைப் பின்பற்றவும், உயர் ஜென்மம் எய்தவும் இங்கே சிலர் நாங்கள் இன்னும் உனக்காகக் காத்திருக்கிறோம், மானுடம் காக்க நீ மறுபடியும் வருவாயா?’ எனக் கேட்கிறார் நமது கவிஞர் பாரதியை பார்த்து. உண்மையில் இதுபோன்ற பல கவிதைகள் சிந்தையைத் தூண்டி படிக்க சுவைக்கவும்  மேலும் வடிவமைப்பில் பார்த்hதல் ருசிக்க வைகசவும் தூண்டுகிறது இந்த ‘மழை நதி கடல்’ கவிதைநூல்.

இக்கவிதைகளுக்காக அணிந்துரையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். “மவுனத்தின் காதலன்” என்ற தலைப்பில் இவருக்கும் நூலுக்கும் ஒரு பொன்னாடையாக அணிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவ்வாறு கூறுகின்றார் கவிக்கோ. “கவிஞர்கள் மௌனத்தின் காதலர்கள் அதனால்தான் கவிஞர் இனியவன் இஸாறுதீன் மௌனத்தை பூக்கள் பேசும் பிரபஞ்ச பொதுமொழி” என்று அழகாகப் பாராட்டுகிறார். அதுமட்டுமல்ல இன்னோரிடத்தில் அவர் “இந்த இருளிலும் ஒளியின் நம்பிக்கை இவரிடம் இருக்கிறது இன்னமும் நம்பிக்கை விதையை நெஞ்சினில் விதைத்து காலத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன் நான்’ என்கிற இனியவன் மட்டுமல்ல நாமும் காத்திருக்கிறோம்” என்று கூறிய அவர் ‘எனது கவிதைகள் இவரை மீட்டியிருக்கின்றன என்று தெரிகிறது இது விரலுக்பும் பெருமை வீணைக்கும் பெருமை’ என்று வாழ்த்தித் தன் பெருமிதத்தைத் தெரிவித்திருக்கிறார்.

‘இயற்கைக்கு இறக்கை கட்டிய இனியவன்’ எனும் தலைப்பில் மதிப்புரை எழுதியுள்ள ஆசுகவி அன்புடீன் அவர்கள் இக்கவிஞனை இவ்வாறாக அறிமுகம் செய்கிறாhர். அதாவது “நவீன கவிதைப் பிரவேசம் பெற்ற புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குத் தலைப்பாகையாக அடையாளம் காணப்படுபவர் இனியவன் இஸாறதீன். 1980களில் அட்டாளைச்சேனையில் உருவான தினகரன் வாசகர் வட்டம், நிலவிலே பேசுவோம், கலை கலாச்சார மேடை நிகழ்வுகளில் அறிமுகமாகியவர் இக்கவிஞர்” என்று ‘இறக்கைக்கவி’ கட்டுகிறார் ‘ஆசுகவி’ அவர்கள். அன்னாருக்கு ஒரு சபாஷ்! நூல் வெளியீட்டாளரான எழுவான் பிரதம ஆசிரியர் பௌசுர் றகுமான் “ஆன்மாவுக்குள் ஓர் ஸ்பரிச உணர்வு” எனும் தலைப்பில் “இந்நூல் மூலமாக தனது வெளியீட்டுப்பணியினை எழுவான் ஆரம்பிக்கிறது” என்கிறார் எழுவான் ஆசிரியர். மேலும், “இதயத்தின் அடிஆழத்தில்” எனும் தலைப்பில் அற்புதமானதோர் முன்னுரையை முன்வைக்கிறார்; இனியவன் இஸாறுதீன் அவர்கள்.

‘மழை நதி கடல்’ என்கிற மூன்று சொற்களுக்கும் நீண்டதோர் விளக்கம் தரும் கவிஞர் ஒரு கட்டத்தில்
‘என்தாய் மண்தான் என் கவிதைகளின் மூலம்
அந்தக்கிராமம்தான் என் கற்பனைகளின் மையம்’  என்று குறிப்பிட்டு
மனித நேயத்தையும் – மாறாத மனிதாபிமானத்தையும் – வாழ்க்கையை நேசிக்கும் வைராக்கியத்தையும் –
கலைக்கண் கொண்டு பார்க்கிறது என் கவிதைமனம்’ என்று கூறுகின்றார். மேலும் இன்னோரிடத்தில்;
‘இயற்கை என் தாய், இயற்கை என் ஆசான், இயற்கை என் சுவாசம்’ என்று இயற்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ள இனியவன் அவர்கள் நூலின் தலைப்பிற்கு இவ்வாறு விளக்கம் தருகின்றார்.

“மழை என்பது வாழ்வின் தொடக்கம்
நதி என்பது வாழ்வின் ஓட்டம்:
கடல் என்பது வாழ்வின் முழுமை என்ற
வாழ்க்கை வரலாற்றுக்கு
வரைவிலக்கணம் வகுத்த பெயராய் இருப்பது என்பதே மூலகாரணம்.” என்கின்றார். உண்மையிலேயே இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் மனித வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படுகின்ற அனைத்துவிடயங்களிலும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கவிதைகளில் மனிதநேயத்தைக் காட்டிப் பின்னரான காலத்தில் நினைவுறுத்துகின்றபோது அக்கால நினைவலைகளும் எம் ஆத்மாவுக்கு நிழலாய் வரும் என்பதை இக்கவிஞர் தனக்கே உரிய இலகு மொழியில் யாவரும் வாசித்து விளங்கும் வகையில் அற்புதமாக இதைப் படைத்துள்ளார். படைப்பாளியின் கற்பனை இயற்கையின் மீது பற்றுவைத்து வாசிப்பவர் யாவரையும் பற்றுள்ளதாக்கிவிடும் இனியவனின் மழை நதி கடல் என்பது மிகையானதல்ல.

‘தாய்க்கும் தந்தைக்கும்’ அர்ப்பணம் செய்திருக்கும் இக்கவிநூல், அழகிய முறையில் அச்சிடப்பட்டு கவரிடப்பட்டும் உள்ளது.  முன் அட்டையில் மனித முகத்தின் இருகண்ணும் பின்புலத்தில் அந்திமேகமாய் உலகைப்பார்த்தும், மழைபெய்தால் அங்கே நதியாகி இறுதியில் கடலில் சங்கமிக்கின்றவாறு அற்புதமான ஒரு ஓவியத்தையும் பதிந்துள்ள ஓவியர் “அஹ்மத் அல் ஹவாரி” அவர்களின் கற்பனையோ அபாரம்;. பின் அட்டையில் கவிஞர் இனியவன் உயிர்ப்பாய் இருந்து எம்மோடு புன்னகைக்கும் நிலையில் படம்பொறித்து அருகில் கவிக்கோவின் அற்புத வரிகளும் வரையப்பட்டுள்ளன. அது இவ்வாறு செல்கிறது.

“இதோ இந்த புல்லாங்குழலோசை
இனியவன் இஸாறுதீன் உடையது
இந்த இசையின் அழகில்
இரசனையும் மானுட நேயமும் ததும்புகின்றன.

இந்த மழை நதி கடல் என்ற
மொழிப்பொழிவில்
அழகிய கவிதைகள்
ஆங்காங்கே நட்சத்திரங்களாய்ப்
பிரகாசிக்கின்றன”  என்றவாறு தொடர்ந்து செல்கின்ற இயற்கையின் வரிகளாக இனியவனின் முயற்சிக்கு பாராட்டும் தெரிவிக்கின்றார் கவிக்கோ அவர்கள். அண்மைக்காலத்தில் வெளியாகிய கவிதை நூல்களுள் மிகவும் கூடிய கனமிக்க கவிதைகளையும், பக்கங்களையும் தாங்கிக் பாத்திரமாக வெளிவந்துள்ள இக்கவிப்புனல் நாளைய உலகில் பார்ப்போரை பரவசப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று நம்பிக்கையுடன் கூறலாம்.

சாமஸ்ரீ : S L மன்சூர் (கல்விமாணி),
அட்டாளைச்சேனை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *