இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தினத்தின் நிமித்தம் இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கொழும்பில் பழைய பாராளுமன்ற முன்றலிலுள்ள அமரர் தொண்டமானின் உருவச் சிலைக்கு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு மலர்மாலை அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பிரதியமைச்சர் தலைமையில் இ. தொ. கா. வின் தலைமையகமான செளமிய பவனில் அமரர் தொண்டமானின் ஆத்ம சாந்திக்காகப் பூஜைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை இ. தொ. கா. செயலாளர் நாயகமும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை 8.00 மணிக்கு அன்னாரது குடும்ப உறவினர்கள் சகிதம் ரம்பொட தொண்டமான் கலாநிலையத்திலுள்ள அமரர் தொண்டமானின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிப்பார்.
இதேவேளை கொட்டகலை தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் கற்கையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு ஸ்தாபகர் தின சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுகின்றார். அத்தோடு அமரர் தொண்டமானின் நினைவாக கொட்டகலையைச் சேர்ந்த 150 ஏழைக் குடும்பங்களுக்கு கால் நடைகளும், வழங்கப்படவுள்ளன. லிந்துல, திலிக்குற்றி தோட்டத்தில் குளிரூட்டி நிலையமொன்றும் திறந்து வைக்கப்படவுள்ளது.