நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும்.
ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும், இலங்கை அரசுக்கும் -விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்ட ஒருவராகவும் இவர் விளங்குகின்றார்.
விடுதலைப்புலிகளின் பிரதான ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியார் அடேல் பாலசிங்கம் எழுதிய The Will to Freedom எனும் நூலில் இடம்பெற்ற The Role Mr. Hameed எனும் கட்டுரையில் “இராஜதந்திரத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அனுபவம் காரணமாகவும், சர்வதேச உறவுகளில் அவருக்கிருந்த மதிநுட்பம் மற்றும் அக்கறையும் காரணமாகவும் ஜனாப் ஹமீட் அவர்களுக்கு டில்லியைப் பகைத்துக் கொள்ள விருப்பமிருக்கவில்லை. ஜனாப் ஹமீட் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொறுமையுடன் செயல்பட்டதினால் அதிக நேரம் எடுத்தாலும் அவருடன் பணியாற்றுவதில் நாம் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தோம். அவர் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் பெரும் வல்லுனராகத் திகழ்ந்தார். இக்கலந்துரையாடல் பணியில் பங்குபற்றாதிருந்தால் இந்தியப் படையினர் வடகிழக்கில் இன்னும் நிலைகொண்டிருப்பார்கள்” என்று அடேல் பாலசிங்கம் 2001ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.
ஒரு தீர்க்கதரிசனமிக்க அரசியல்வாதியாக எமக்கு நன்கு தெரிந்த ஹமீட் அவர்களின் மற்றுமொரு பக்கமான கலை இலக்கிய ஆர்வங்கள் பற்றி அனேகருக்குத் தெரியாது. அதனை எடுத்துக் காட்ட விளைவதே இக்கட்டுரையின் நோக்கம்.
எமது இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டனர், ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் மக்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்து விடுவதில்லை. சில அரசியல்வாதிகள் யாரென்ற விபரம் அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடுவதும் உண்டு.
ஆனாலும், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில அரசியல்வாதிகள் மாத்திரமே மக்கள் மனதில் நிலையான இடத்தினைப் பிடித்து விடுகின்றனர். அந்த அடிப்படையில் இலங்கை அரசியல் வரலாற்றில் அமரத்துவம் அடையாத நாமங்களில் ஒன்றாகவே கலாநிதி, அல்ஹாஜ் ஏ.ஸீ.எஸ். அவர்களின் நாமமும் அமைந்துள்ளது. அவர் நாட்டுக்கும், தனது சமூகத்துக்கும் ஆற்றிய அருஞ் சேவைகளே இத்தகைய மனப்பதிவுகளுக்கு காரணமாகின்றது.
கண்டி மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான அக்குறணையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1960 மார்ச் 19ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த ஹமீத் அவர்கள், 1999.09.03 ஆம் திகதி மரணிக்கும்வரை தொடர்ச்சியாக நான்கு தசாப்த காலங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட இவர், 1989ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரை அதே அமைச்சில் பணியாற்றியுள்ளதுடன், இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையாக்கத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளவராவார்.
இலங்கை அரசியலில் வெளிநாட்டு அமைச்சராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இருக்கமுடியாது என்று காணப்பட்ட நிலைமையை இவரது நியமனம் மாற்றியமைத்தது. பின்பு ஐக்கிய சோஸலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றத்தில் 1989.02.18ஆம் திகதி முதல் உயர்கல்வி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமனம் பெற்ற இவர், 1990.03.30ஆம் திகதி முதல் நீதியமைச்சராகவும், 1990.08.30ஆம் திகதி முதல் உயர்கல்வித் திட்ட அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மீண்டும் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் 1994 ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பணியாற்றினார்.
கண்டி மாவட்டத்தில் அக்குறணை தேர்தல் தொகுதியில் குருகொடை எனும் கிராமத்தில் 1928 ஏப்ரல் 10ஆம் திகதி அப்துல் காதர் தம்பதிகளின் செல்வப் புதல்வராக சாஹ{ல் ஹமீத் பிறந்தார். கட்டுகஸ்தோட்டை சாந்த அந்தோனியர் வித்தியாலயம், மாத்தளை விஜய கல்லூரி, மாத்தளை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றில் தனது கல்வியினைப் பெற்ற ஹமீத் அவர்கள், தனது கல்லூரிக் காலம் தொட்டே மும்மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தனது இளமைப்பராயத்தில் கல்வி நடவடிக்கைகளில் இவர் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பிரதேசத்தில் ஒரு சிறந்த ஆங்கில ஆசானாக திகழ்ந்த இவர், 1950இல் ஆங்கிலக் கல்விப் போதனைக்கென ஒரு தனியார் கல்லூரியையும் அமைத்தார். செயல்திறன்மிக்க இவரை அடையாளம் கண்டு கொண்ட மாத்தளை நகர மக்கள் மாத்தளை நகரசபைத் தேர்தலில் இவரை ஈடுபடச் செய்தனர்.
ஹமீத் அவர்கள் தனது மாணவப்பராயத்தில் தனது ஓய்வுநேரங்களை அதிகமாக வாசிப்பதிலும், பொதுச் சேவைகளிலுமே செலவழித்துள்ளார். வாசிப்பு ஒரு மனிதனின் அறிவுத்திறனை துலக்கமடையச் செய்யும். இந்த அடிப்படையில் தேசிய சர்வதேச சஞ்சிகைகளிலும், நூல்களிலும், பத்திரிகைகளிலும் பெற்ற அறிவே பிற்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலே இவரைப் புகழடையச் செய்ய அடிப்படைக் காரணியாக அமைந்தது. இவரின் திறமைகயைக் கருத்தில் கொண்டு சாஹ{ல் ஹமீத் அவர்களுக்கு கொரிய சனநாயகக் குடியரசு ஹனூக் பல்கலைக் கழகத்தினால் (Hanuk University, Republic of Korea) 1978ஆண்டில் அரசியல் விஞ்ஞானத்திற்கான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் 1990இல் இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் இவருக்கு கலாநிதி கௌரவப் பட்டம் வழங்கி கௌரவித்தது.
ஒரு புகழ்பெற்ற சிரேஸ்ட அரசியல்வாதியாக இவரை நாம் அறிந்துள்ள போதிலும்கூட, அரசியலுக்குப் புறம்பாக இவர் எழுத்துத்துறையிலும், ஊடகத்துறையிலும் அதீத ஆர்வமிக்கவராக இருந்தார் என்பது அநேகருக்குத் தெரியாத ஒரு விடயமே. தனது 15 வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த இவரின் கன்னியாக்கம் “சண்டே ஒப்சேவர்” பத்திரிகையின் சிறுவர் பகுதியில் 1943ம் ஆண்டில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஆக்கங்களை ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பாடசாலையில் வகுப்பு 7 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது மாத்தளைப் பிரதேசப் பாடசாலைகளுக்காக “New Broom” என்ற பெயரில் ஒரு சஞ்சிகையொன்றை ஆரம்பித்தார். இச்சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பல்வேறு பணிகளைப் புரிந்தார். தனது கல்லூரிக் காலம் முதல் தான் மரணிக்கும் வரை ஆயிரக்கணக்கான ஆக்கங்களை தேசிய, சர்வதேச இதழ்களிலும், பருவ வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும் இவர் எழுதியுள்ளார். அதேபோல இதுவரை இவர் நான்கு பெறுமதிமிக்க நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின் சுருக்க விபரங்கள் வருமாறு.
1. Foreign Policy Perspectives Of Sri Lanka
Selected speeches 1977 – 1987
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கு.
தெரிவு செய்யப்பட்ட உரைகள். 1977- 1987
2. In Pursuit of Peace
On Non-Alignment and Regional Coopertion
சமாதானத்தை நோக்கி
3. The Owl and the Lotus (ஆங்கிலம்)
Lotus Och Ugglan (பிரான்ஸ்)
தாமரையும் ஆந்தையும்
இது ஒரு சிறுவர்களுக்கான நீதிக் கதை நூலாகும். ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் பின்பு பிரான்ஸிய மொழியிலும் வெளிவந்தது.
4. The Spring Of Love and Mercy
அன்பின் ஊற்று
அல்குர்ஆன் ஆயத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களினால் இயற்றப்பட்ட கவிதை நூல் The Spring Of Love and Mercy (அன்பின் ஊற்று) என்பதாகும். இந்நூலில் காணப்படக்கூடிய கவிதைகளை நோக்குமிடத்து கலாநிதி ஹமீட் அவர்களின் ஆங்கில மொழி அறிவும், வர்ணனைத் திறனும், மார்க்க உணர்வும் நன்கு புலப்படுகிறது. மேலும் சாதாரண மக்களின் ஆத்மீக உணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
ஹமீத் அவர்களும் கார்ட்டூன் சித்திரங்களும்.
பெரும்பாலான அரசியல்வாதிகள் விரும்பாத ஒரு பக்கத்தை இவர் நேசித்த பண்பானது, இவரின் கலைத்துறை இரசனையையும், ஆர்வத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. அதாவது, ஒரு அரசியல்வாதியின் ‘சித்திரவதைக் களம்| என வர்ணிக்கப்படும் கார்ட்டூன் துறையில் அவருக்கிருந்த ஆர்வமும் அதை அவர் இரசித்த முறைகளும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.
இலங்கையின் பிரபல கார்ட்டூன் ஓவியர்களான விஜயசோமா, யூனுஸ், ஜெரயின், அபேசேகரா போன்றோர் ஹமீத் அவர்கள் இலங்கையில் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அவர் அடிக்கடி சென்ற சந்தர்ப்பத்தை அவர்களின் கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கருப்பொருளாக்கி கேலி செய்வதில் அலாதி பிரியம் காட்டியிருந்தார்கள்.
இக்காலகட்டத்தில் ஈழத்து தேசிய பத்திரிகைகளில் கார்ட்டூன் சித்திரங்களில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் விமல்வீரவங்ச, மர்வின்சில்வா இடம்பெறுவதைப் போல, 1980களில் இலங்கைத் தேசிய பத்திரிகைகளில் முக்கிய கருப்பொருளாக விளங்கியவர் கலாநிதி ஹமீத் அவர்களே. ஆனால், அந்த கேலிச் சித்திர ஓவியங்களைக் கண்டு ஹமீத் அவர்கள் கோபம் கொள்ளவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது முகம் சுழிக்கவோ இல்லை. மாறாக, தனது உலகம் சுற்றுதலை இலக்காக்கிக் கொண்டு தன்னை ஓவியங்கள் ஊடாக சித்திரவதைப்படுத்திய அவ்வோவியங்களைத் தொகுத்து ஒரு புத்தமாக வெளிவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பத்திரிகைகளில் வந்த கேலிச்சித்திரங்கள் அழிந்துவிடக் கூடாதென்றும், அவை பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் சேகரித்து வெளியிடப்பட்ட இந்த கேலிச்சித்திர தொகுப்பு நூல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் இந்நூலுக்கு கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீத் எழுதிய முன்னுரையின் தலைப்பு “கல்லெறிக்கு பிரதியுபகாரமாக மலர்ச் செண்டு” என்பதாகும்.
அம்முன்னுரையில் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீத் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“…நானே இலக்காகிச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கும் இந்தக் கார்ட்டூன் தொகுப்பிற்கு ஒரு முன்னுரையோ, ஓர் அணிந்துரையோ (விரும்பியபடி வைத்துக் கொள்ளுங்கள்) வழங்குமாறு இதன் வெளியீட்டாளர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று சொல்வார்களே. அதனைத் தான் இந்த வேண்டுகோள் ஞாபகப்படுத்துகிறது. இத்தொகுப்பைப் பார்க்கக் கையில் எடுக்கும் வாசக நேயர், பக்கங்களைப் புரட்டிச் செல்லும்போது நூல் முழுவதும் கல்லெறியும் சொல்லெறியும் விரவிக் கிடப்பதையே காண்பர். என்மீது தொடுக்கப்பட்ட கல்லெறிக்குப் பிரதியுபகாரமாக மலர்ச்செண்டு தரும்படி வேண்டுகிறார்கள். நான் அதனை மனமுவந்து வழங்குகின்றேன்…
‘முன்னைய காலத்தில் சித்திரவதை செய்வதற்கு ‘ரெக்’ என்ற கருவியை உபயோகித்தனர். இப்போதுதான் இருக்கவே இருக்கிறது பத்திரிகை’ என்று ஒஸ்கார் வைல்ட் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த இருவகை வேதனையூட்டும் சாதனங்களுள் எதை விரும்புகிறாய் என்று அரசியல்வாதியைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக அவர் அப்புராதன சாதனத்தைத் தான் தேர்ந்தெடுப்பார். காட்டூன் சித்திரக்காரனை சகிக்கவொண்ணா கொடிய பிரதிநிதியாக காட்டும் பத்திரிகையைவிட பழைய கால ‘ரெக்’ காருண்யமானது….
…..இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள விஜேசோமா, யூனுஸ், ஜெரய்ன், அபயசேகரா ஆகிய கார்ட்டூன் கலைஞர்களுக்கு ஓர் அந்தரங்கத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன். மீண்டும் ஒஸ்கார் வைல்ட் கூறியவாறு “பிறர் பேச்சுக்கு ஆளாவது மோசம்: ஆனால், பேச்சுக்கு ஆளாகாமல் இருப்பது அதனிலும் மோசம்”. அரசியல்வாதியைப் பொறுத்தமட்டில் பேச்சுக்கு ஆளாக்கப்படுவது மங்கிப்போகாது. பேரோடிருக்கவும், பெருவெற்றியீட்டவும் கார்ட்டூன்கள் துணiயாக நிற்கின்றன. ஆகவே, கார்ட்டூன்காரர்கள் அரசியல்வாதிக்கு பக்க பலமானவர்களே…
….இக்கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்தேன்: சுவைத்தேன் என்று சொல்லி வைக்க விரும்புகிறேன். எனது உவகையின் இரகசியத்தைத் தெரிந்து கொண்ட பின், என்னைப்போல் ‘இரை|யாக அகப்படுவோரை எள்ளி நகையாடுவதை இவர்கள் நிறுத்தமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்…
….வேடிக்கை ஒரு புறம் இருக்க, தன்னையே நோக்கி ஒருவன் சிரிக்கப் பழகிக் கொள்வதானது ஜனநாயக முறைக்குத் தன்னைப் பயிற்றிக் கொள்வதாக அமையும். இது அரசியல்வாதிக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பண்பாகும். இம்முயற்சியில் அரசியல்வாதிக்கு துணைவனாய் விளங்குபவர் கார்ட்டூன் சித்திரக்காரர் என்பது மிகையாகாது….”
மேற்படி முன்னுரையானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய பல உட்கருத்துக்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு புகழ்ச்சி மட்டுமல்ல. இகழ்ச்சியும் அவசியம் என்பதையும், அத்தகைய இகழ்ச்சிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எதிர்கால அரசியல்வாதிகள் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இவர் மிகவும் நாசுக்காக வெளிப்படுத்துகின்றார். மாறாக, எவ்விடத்திலேனும் இந்த கேலிச்சித்திர ஓவியர்களை அவர் நிந்திக்கவோ, அவமதிக்கவோ இல்லை. இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஹமீத் அவர்களின் இந்தப் பண்பு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். ஆனால் அண்மைக் காலத்தில் சில அரசியல் வாதிகள் கேலிச் சித்திரக்காரர்களை விமர்சிப்பதையும்;, சில நேரங்களில் அவர்களைத் துன்புறுத்துவதையும், அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிகழ்வுகள் குறித்த அரசியல் வாதிகளின் ஆற்றாமையையே வெளிப்படுத்துகின்றது.
இந்நூல் வெளிவந்த பின்பு கேலிச்சித்திர ஓவியர் யூனுஸ் அவர்களை நான் கொழும்பில் ஒரு திருமண வீட்டில் சந்தித்து, அவருடன் கதைத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னிடம் கூறினார். “ஹமீத் ஒரு வித்தியாசமான மனிதர். நாங்கள் எவ்வளவுதான் கேலிச்சித்திரங்கள் மூலமாக அவரைக் கேலி பண்ணினாலும்கூட அவர் அதைப் பொருட்படுத்தவே மாட்டார். நாட்டிலிருந்தால் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவிப்பார். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான போக்கினைக் கொண்ட மனிதர் அவர்” என்றார்.
சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மைப் பற்றி ஒரு கேலிச்சித்திரம் வெளிவந்தால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு கேலிச்சித்திர ஓவியர்களை கண்டிக்கும் இக்காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு ஹமீத் அவர்களின் இந்த பண்பு ஒரு முன்னுதாரணமாகும்.
ஹமீத் அவர்கள் கலையை நேசித்ததாலேயே அவரால் கலையுணர்வினை நயக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் காணப்படக்கூடிய தேசிய ஊடகங்களும் சரி, தனியார் ஊடகங்களும் சரி மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு அரசியல்வாதிகளினதும் சாதகமான கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஒரு அரசியல்வாதியால் நிகழ்த்தப்படும் பேச்சிக்களையோ அல்லது அறிக்கைகளையோ கூட தமக்குச் சார்பான வகையில் உள்ளவற்றையே வெளியிட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் இன்று இலங்கையில் காணக்கூடிய ஊடகங்களில் பல இருப்பதை அவதானிக்கலாம். கட்டுரைகளில் மாத்திரமல்லாமல் கேலிச் சித்திரங்களில் கூட இத்தகைய போக்கினையே அவதானிக்கமுடியும்.
1970, 1980களில் கேலிச் சித்திரத் துறையில் இடதுசாரிப் போக்குமிக்க சில பத்திரிகைகளில் கட்டுரைகளிலும் சரி, கேலிச்சித்திரங்களிலும் சரி பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. இக்காலப் பகுதியில் ‘அத்த’ பத்திரிகையில் யூனூஸ் அவர்களின் கேலிச் சித்திரங்கள் வாசகர்களிடையே பெரிதும் வரவேற்பினைப் பெற்றதொன்றாகவே விளங்கியது. “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் யூனூஸ் அவர்களின் கேலிச் சித்திரங்கள் முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தன.
யூனூஸ் அவர்களினால் அமைச்சர் ஹமீட் அவர்களைப் பற்றி வரையப்பட்ட கேலிச் சித்திரங்களுள், வாசகர்களிடையே பெரிதும் விமர்சனத்துக்குள்ளான சித்திரமும், அமைச்சர் அவர்களை வெகுவாகக் கவர்ந்ததுமான சித்திரம், அமைச்சர் அவர்கள் தமது அமைச்சின் வேலைப்பளு நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர் அதிகமான சந்தர்ப்பங்களில் தனது தொகுதியில் இருப்பதில்லை. இதனைக் கேலி செய்யும் வகையில் அமைச்சரவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி ஒரு பொதுமகனிடம் “ஹாரிஸ்பத்துவைக்குப் போகும் வழிஎன்ன?” என்று அமைச்சர் வினவுவதைப் போல அமைந்த கேலிச் சித்திரமாகும்.
இலங்கையில் கேலிச் சித்திரத் துறையில் புகழ் பெற்ற மற்றுமொரு ஓவியரான டபிள்யு. ஆர். விஜேயசோமா ‘ஐலண்ட்’ பத்திரிகை நிறுவனத்தின் கேலிச்சித்திர ஓவியராவார். இவர் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்றவர். இவரின் கேலிச் சித்திரங்கள் பல கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கும். “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் இடம்பெற்றுள்ள கேலிச்சித்திரங்களை வரைந்த ஓவியர்களுள் ஒருவரான டபிள்யு.ஆர். விஜயசோமா அவர்கள் தன் கருத்தினைப் பின்வரும் அடிப்படையில் வெளியிட்டிருந்தார்.
“…..நியுயோர்க்கில் ஜனாப் ஹமீத் அவர்களை நான் சந்தித்தபோது கேலிச்சித்திர நூலொன்றைத் தாம் வெளியிட உத்தேசித்திருப்பதாக அவர் கூறினார். நான் ஒரு விநாடி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவரே தொடர்ந்து “என்னைக் கிண்டல் செய்யும் சித்திரங்களையே வெளியிட உள்ளேன்” என்றார்.
உண்மையில் தான் மறைக்க விரும்பும் விடயங்களை ஓர் அரசியல்வாதி தானே வெளியிடத் துணிந்துள்ளமை இதுவே முதல் முறை போலும். கேலிச்சித்திரக்காரர்கள் அரசியல்வாதியின் பார்வையில் ‘உண்ணி’ போன்றவர்கள். ஓயாது எரிச்சல் ஊட்டுபவர்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த சுய கேலிச்சித்திரக்காரர்களை சிறையில் போட வேண்டுமென்றே அந்தரங்கத்தில் விரும்புவர். ஆனால், ஹமீத் அவர்கள் இவர்களை எதிர்காலச் சந்ததியினர்களுக்காக புத்தகத்தில் போற்றி வைக்க முடிவு செய்துள்ளார்கள். தன்னையே கேலிப்பொருளாகக் கொண்டு சிரிக்கும் திறன் கிடைத்தற்கரிய பேறுகளுள் ஒன்று என்பது அறிஞர் கருத்து. இதனையே செய்ய முற்பட்டுள்ளார் ஜனாப் ஹமீத் அவர்கள். இது அவரின் வெற்றிச் சிரிப்பு என்றே கூற வேண்டும். என்றிருந்தார்
‘மார்க் ஜெரெயின்’ சன், வீக்கென்ட், தவச ஆகிய பத்திரிகைகளில் பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட சித்திரங்கள் தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் பெற்றிருந்தன. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கேலிச் சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். இவரால் வரையப்பட்ட பல சித்திரங்கள் வெளிநாட்டு ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. சர்வதேச புகழ்பெற்ற ‘மார்க் ஜெரெயின்’ ஹமீத் அவர்களை பற்றியும் அவரது கேலிச்சித்திர தொகுப்பு நூல் பற்றியும் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“ஹாஸ்யத்தைப் புரிந்து கொள்பவர்களுக்கு விளக்கம் தேவையில்லை,
புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் சாத்தியமில்லை”.
இந்த வார்த்தையில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம்.
அமித அபயசேகரா தவச, ரிவிரச, சன், வீக்கென்ட் ஆகிய பத்திரிகைகளில் பிரபல்யம் பெற்ற கேலிச் சித்திர ஓவியராவார். இவரால் வரையப்பட்ட சித்திரங்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. தனக்கென ஒரு தனி வாசகர் வட்டத்தை வைத்திருந்தவர் இவர். இவரின் கேலிச்சித்திரங்கள் பாராளுமன்றத்தில் கூட விமர்சிக்கப்பட்டவை. வெளிநாட்டு அமைச்சர் அவர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கேலிச் சித்திரங்களை இவர் வரைந்துள்ளார். அமித அபயசேகரா “வெளிநாட்டமைச்சர் ஹமீத் பற்றிய கார்ட்டூன் சித்திரங்கள்” எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“…பிறரைப் பார்த்துச் சிரிப்பவர் பலபேர். தம்மையே எள்ளிநகையாடுபவர் வேறு சிலர். அவ்வாறு செய்யக்கூடிய அரசியல்வாதிகள் சிலரிலும் சிலரே. இதற்காதாரமாகப் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், நகைச்சுவையெழுத்தார்கள், கேலிச் சித்திரக்காரர்கள் ஆகியவர்களுக் கெதிராக அ.சி.ம. (அதி சிரேஸ்ட மனிதர்கள்) என்போரும், அ.சி.ம. (அதி சிறிய மக்கள்) என்போரும் நாள்தோறும் விடுக்கும் மிரட்டல்களை நோக்குக.
ஆகவே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போன்றவொரு முன்னணி அரசியல்வாதி, தன்னைத்தானே எள்ளிநகையாடும் அரிய திறன் பொருந்தியிருப்பதையும் இதற்கு மேலாக அவர் பற்றியும், அவருக்கெதிராகவும் வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள் அடங்கிய நூலொன்றை வெளியிட முற்பட்டதன் மூலம், தன் நகைப்புத் திறனைப் புதிய பாணியில் புலப்படுத்தியிருப்பதையும் எண்ணிப் பார்க்குமிடத்து புதிய உற்சாகமும் உள்ளக்கிளர்ச்சியும் ஏற்படுகின்றது. “ஹமீதும், வழக்கமும், பிறவும்” என இதனைக் குறிப்பிடலாம். (இவ்வாறு வெளியிடப்படுவதனால் இத்துறையில் முதன்மை ஒன்றினை மாண்புமிகு ஹமீத் அவர்கள் தட்டிக் கொண்டார்கள் என்றே கூற வேண்டும். நான் அறிந்த வேறு எந்த அரசியல்வாதியும் இவ்வாறு செய்ததில்லை)
இந்நாட்டின் அதிசிறந்த கேலிச்சித்திரக்காரர்களுள் ஒருவரான கோலெற் அவர்கள் லண்டன் மாநகரைச் சேர்ந்த டேவிட்லோ அவர்கள் போன்ற அரசியல் அபிப்பிராயத்தை உருவாக்கும் வன்மை படைத்தவர் என்று சொல்லப்படுகின்றது. (கோலெற் அவர்கள், அவுஸ்திரேலியாவுக்கு மூட்டை முடிச்சோடு சென்ற பின்னரே அமைச்சர் ஹமீத் அவர்கள், அரசியல் வானில் சுடர்விடத் தொடங்கினார்கள்) கோலெற் அவர்களிடம் இலவசக் கல்வியின் தந்தையாகிய கலாநிதி சி.டபிள்யு. கன்னங்கரா அவர்கள், கொண்டிருந்த தீராத விரோத உணர்வினால் (அக்காலத்தில் ரோயல் கல்லூரியின் ஆசிரியராக இருந்த) கோலெற் அவர்கள் தூரிகையைக் கீழே வைக்க வேண்டும். அல்லது அரசாங்க சேவையிலிருந்த விலகிக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டபோது கோலெற் அவர்கள் ஆசிரியத் தொழிலைத் துறந்து, முழுநேரக் கேலிச்சித்திரக்காரராக உழைக்கத் தீர்மானித்தார், இலங்கையின் செய்தித்தாள் வாசக நேயர்களுக்கு திறமைவாய்நத கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவரை, கன்னங்கரா அவர்கள் தன்னையறியாமலே வழங்குவதற்குக் காரணமானார். கோலெற் அவர்களை வெளியேற்ற கன்னங்கரா அவர்கள் காரணமாக இருந்தது போன்று, கோலெற் அவர்களும் கலாநிதி கன்னங்கராவை அரசியலிலிருந்து வெளியேற்றுவதற்குக் காரணமாக விளங்கினார்கள். (இதில் படிப்பினை ஒன்று எங்கோ புதைந்து கிடக்கிறது)
“ஊதியத்துக்குத் தக்க உழைப்பாளியான கேலிச்சித்திரக் கலைஞர் ஒருவர், குரல் எழுப்பவியலாத பலரின் பிரதிநிதியான சாதாரண மனிதனுக்காகக் குரல் கொடுக்கும் பாங்கிலேயே செயற்படுகிறார். அவர், தான் உழைக்கும் தாபனத்தை உயர்த்தும் நோக்கில் சாதாரண மனிதனுக்குச் சேவையாற்றுவதில்லை. அமைச்சர் ஹமீத் அவர்கள் தாபனத்தின் ஓர் அங்கமானவர், அதில் அவர் போன்று இன்னும் பலரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று அமித அபயசேகரா தெரிவித்த கருத்தையும் இவ்விடத்தில் சிந்திப்பது பயனள்ளதாக இருக்கும்.