கிழக்கு மாகாணத்திலுள்ள அடர்ந்த காடுகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளும், கஞ்சா செடிகளை உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகளும் மற்றும், மரங்களை வெட்டிக் கடத்துகின்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கன்றன.
கிழக்குக் காடுகளுக்குள் காணப்படும் புராதன சின்னங்களைத் களவாகத் தோண்டியெடுத்து விற்பனை செய்வதைத் தடுக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடபட்டு வருகின்றனர். அதேவேளை, தொல்பொருள் சின்னங்கள் உள்ள இடங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சில உள்ளுர்வாசிகளின் உதவியுடன் காட்டுப் பகுதிகளுக்குள் சென்று சதாதிஸ்ஸ என்ற மன்னனின் ஆட்சிகால தொல்பொருள் சின்னங்களைத் தோண்டி எடுத்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குழுவினர் அண்மையில் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. காடுகளுக்குள் கஞ்சா உற்பத்தி செய்து பதப்படுத்தி அக்கரைப்பற்று வழியாக கொழும்பிற்கு கடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச் செயல்களையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட காட்டுப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.