”துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.” வேலும்மயிலும் மனோகரன் (தவிபு இன் சர்வதேசப் பிரிவின் மூத்த உறுப்பினர்)

மே 18க்குப் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பினுள் பலத்த பிளவுகள் ஏற்பட்டு குழுவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டது. இப்போது இக்குழுக்கள் இரு பிரதான அணிகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளன. ஒன்று உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற அணி. மற்றையது உருத்திரகுமாரனின் தலைமையை அல்லது நாடுகடந்த தமிழீழத்தை எதிர்க்கின்ற அணி.

நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைக்கான போட்டியில் உருத்திரகுமாரனுடன் பிரித்தானியாவில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஜெயானந்தமூர்த்தியும் போட்டியிட இருந்தார். ஆனால் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரினதும் ஆதரவைத் தக்க வைத்து தன் வெற்றியை உருத்திரகுமார் உறுதிப்படுத்தியதால் ஜெயானந்தமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

ஆயினும் நாடுகடந்த தமிழீழ அரசை ஜெயானந்தமூர்த்தியின் ஊடாகக் கைப்பற்ற திட்டமிட்ட ஐரோப்பிய அணி தற்போது உருத்திரகுமாரனுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எதிராக இணைய யுத்தம் ஒன்றைத் தொடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே இந்நேர்காணல் ‘தாய்நிலம்’ இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இப்போதைய காலப் பொருத்தம் கருதி தேசம்நெற் வாசகர்களுக்காக இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. – நன்றி தாய்நிலம்.
._._._._._.

விடுதலைப் புலிகளின் சர்வ தேசக்கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான வேலும்மயிலும் மனோகரன் அவர்களுடனான இந்தச் செவ்வி, சமகால அரசியல் நிலவரங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தனக்கு எதிராக நடத்தப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் என்பனவற்றினைப் பற்றிய பலதரப்பு கேள்விகளுக்கு பதில் தருகின்றது.
 
அறிமுகம்:

1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்தியில் இவர் வழங்கினார்.

இயக்கத்தின் சார்பில் சர்வதேச தரப்புக்களுடனான பேச்சுக்கள் பலவற்றின் ஆரம்பகட்டங்களை மனோகரன் அவர்களே தலைமையின் வழிகாட்டலில் நடத்தினார்.

புலம்பெயர்ந்த தமிழர் தரப்புக்குள் இவேர் விட்டுள்ள நச்சு சக்திகள் என்பனவற்றின் நெருக்கடிகளை மீறி பிரான்சில் நாடுகடந்த அரசுக்கான சனநாயக பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட செயற்குழுவுக்குத் தலைமை தாங்கி தேர்தலை நடாத்தி முடித்தார்.

._._._._._.

கேள்வி:  இன்றுள்ள தாயக நிலவரங்களை ஒரு மூத்த இயக்க செயற்பாட்டாளனாக எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: எமது வரலாற்றில் இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள் வலுவில் நாங்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப் பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம் தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.
 
கேள்வி: எவ்வாறு இந்தச் சிக்கலை தமிழ்சமூகம் எதிர்கொள்ளலாம் என எண்ணுகின்றீர்கள்?

பதில்: இதுவொரு நீண்டகால வியூகத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய விவகாரமாகும். வெறும் பிரகடனங்களும் வெற்றுத் தந்திரங்களும், உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களும் இன்றைய ஆபத்தான நிலையிலிருந்து எமது அரசியலை, இருப்பை மீட்டெடுக்காது என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறான நீண்டகால போராட்டத்திற்கு, அல்லது சந்ததி சந்ததியாக நடத்தப்பட வேண்டியும் வரக்கூடிய ஒரு போராட்டத்திற்கு தேவையான அடிப்படைகளை நாங்கள் இப்போது அத்திவாரமாக இடுதல் வேண்டும். இதற்கான மூலமான தரப்பாய் இருப்பவர்கள் தாயகத்தில் வாழும் மக்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் அந்த மூலத்தினை பலப்படுத்தும் அடுத்த வட்டம் என்றே நான் கணிப்பிடுகின்றேன். இந்த அடிப்படையில்,

முதலாவது, தாயகத்தில் வாழும் மக்களின் உடனடிப்பிரச்சனைகளை புறக்கணிக்காது, அதற்குரிய முக்கியத்துவத்தினை உணர்ந்து நாங்கள் செயற்படல் வேண்டும்.
இரண்டாவது, சிறைப்பட்டுக் கிடக்கும் எமது போராளிகளைப் பாதுகாத்து அவர்களை வெளியில் எடுத்துவிடும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
மூன்றாவது, தாயகத்தில் செயற்படும் அரசியல் சக்திகளிடையே ஒருங்கிணைப்பினையும், பொது வேலைத்திட்டத்தினையும் ஏற்படுத்தி எதிர்காலம் தொடர்பான நீண்டகாலப் பார்வை கொண்ட போராட்டப் பாதையை வகுக்க வேண்டும். நான் அரசியல் போராட்டத்தினைத்தான் முன்வைக்கின்றேன்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: முள்ளிவாய்க்கால் என்கின்ற பேரவலத்தினை தந்த சக்திகள் அதன் அடுத்த கட்டமாக புலத்துத் தமிழர்களை அடுத்த முள்ளிவாய்க்கால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள் என்றுதான் நான் மதிப்பிடுகின்றேன். புலத்தில் வாழும் தமிழ்மக்கள் விடுதலைப் போருக்கு தமது பங்களிப்புக்களை நிறைய வழங்கியவர்கள். நிறைந்த கனவுகளைக் கொண்டிருந்தவர்கள். மே18 வரையான இழப்புக்களால் அல்லது தோல்விகளால் துவண்டு, விரக்தியுற்று சோர்ந்து போயுள்ளனர். அவர்களை இன்னமும் துன்பப்படுத்தும் விதத்தில் இணையங்கள், ஊடகங்கள் என்கின்ற பெயரில் மக்கள் விரோத, சக்திகள் நடத்தும் மனோவியற் போரினை இந்த முள்ளிவாய்க்கால் இரண்டிற்கான மூல தந்திரமாக நான் பார்க்கின்றேன்.

கேள்வி: இன்று புலம்பெயர்ந்த நாடுகளின் ஊடகங்களைப் பொறுத்தவரை கே.பி விவகாரமே முக்கியத்துவமான தாக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த கே.பி விவகாரத்தினை துரோகமாக்கி, நீண்டகால செயற்பாட்டாளர்கள், நீங்கள் எனப் பலதரப்பும் கடும் வசைபாடல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: எம் மீதான இவர்களின் வசைபாடல்களை கெட்ட உள்நோக்கம் கொண்டவையாகத் தான் நான் கருதுகிறேன். தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் சிலர் தேசியம் சார்ந்த செயற்பாடுகள் தாம் சார்ந்தோரின் ஏகபோகமாக உரிமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அனைவரும் தமக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் தமது கட்டமைப்புக்கு வெளியில் தேசியம் சார்ந்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதனை இவர்கள் இப்போது தமது முதன்மைப்பணியாகக் கொண்டுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதனை அவர்கள் எதிர்த்தமைக்கும் இதுதான் காரணமாக அமைந்தது. நாம் இவர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு உறுதுணையாக நின்றோம். இப்போதும் இவர்களின் ஏகபோக தேசிய அரசியலுக்கு நாம் உண்மையோடு அச்சுறுத்தலாக உள்ளோம். அதனால் இத்தகைய வசைபாடல்கள் மூலம் எம்மை அரங்கில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் முனைகிறார்கள். இப் பின்னணியில் இருந்துதான் இவர்களின் வசைபாடல்களை நாம் நோக்க வேண்டும்.

நாம் தமிழீழம் பற்றிப் பேசிக்கொண்டு தாயகத்தில் தற்போது கால் வைக்க முடியாது. தாயகத்தில் எதுவும் பரந்த சமூக மட்டத்தில் செய்வதானால் சிறிலங்கா அரசினை மீறியும் செய்ய முடியாது. இது இன்று ஈழத் தமிழர் சமூகம், அதுவும் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சவால். தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் தமிழ்மக்களும் இப்போது தமிழீழம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விட்டார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு எந்த வகையான அரசியல் வெளியும் இப்போது அங்கு இல்லை.

புலத்திலுள்ள நாம் தாயகத்தில் வாழும் மக்களுக்காக அவர்களை நெருங்கிச் சென்று கைகொடுக்க முடியாதுள்ளோம். இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவது எவ்வாறு? இவற்றினைப் பற்றிப் பேசுவதும்இ இவற்றிற்கான அணுகுமுறைகளைப் பற்றி விவாதிப்பதும்இ இவை பற்றிய கவனத்தினை ஏற்படுத்துவதுமே முதிர்ச்சியான ஊடக அல்லது அரசியல் அணுகுமுறை. இதனை விட்டு விட்டு மக்களின் கவனத்தினை திசைதிருப்புவோரை என்ன வென்று சொல்லது?.

கே.பி இயக்கத்தின் மூத்த போராளி. கைதுக்குப் பிற்பாடு சிங்களத்துடன் ஏதோவொரு தொடர்பாடலைப் பேண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசியல் கைதி. அவரை துரோகி என்பவர்கள் மக்களுக்கும், தியாகத்தினால் கட்டியெழுப்பப்பட்ட எங்கள் தேசத்தின் வரலாற்றிற்கும் பதில் கூறட்டும். அதற்கான பதிலை கே.பி தனது சொல்லாலோ, செயலாலோ வழங்கட்டும். துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.

எங்களுக்கு எமது தேசியத் தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன். இன்று குறித்த இணையத்தளங்கள் ஊடாகவும், ஒரு பத்திரிகை ஊடாகவும் சிறீலங்கா அரசின் ஏஐண்டுகளாக செயற்பட்டு மக்களைக் குழப்பும் தீயவர்கள் பற்றி தேவைப்பட்டால் நான் எதிர்காலத்தில் பேசுவேன்.

கேள்வி:  உங்களுக்கு எதிரான தாக்குதலை நாடுகடந்த அரசாங்கத்தினை குழப்ப முன்பு முற்பட்ட அதே ஊடகங்களே நடத்துகின்றன. இன்றும் மீண்டும் உங்களுக்கு எதிராகவும், உருத்திரகுமாரனிற்கு எதிராகவும் வசைபாடல் நடத்தப்படுவதால், இது நாடுகடந்த அரசினை குழப்பும் சதி என்று சொல்லலாமா?

பதில்: எனக்கும் அவ்வாறான ஊகம் உள்ளது. நாடுகடந்த அரசாங்கம் ஒரு அரசியல் வேலைத்திட்டம். இன்று ஏற்பட்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்புபட்ட இடைவெளியினை நிரப்பும் ஒரு திட்டமாகவே இதனை பார்க்கின்றேன். நாடுகடந்த அரசாங்கத்தினை எதிர்ப்பது, கொச்சைப்படுத்துவது, இயங்கவிடாது தடுப்பது, தமது கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க வேண்டும் என்று கூறுவது எல்லாமே இந்த அரசியல் வேலைத்திட்டத்தினை தோற்கடிக்கும் நடவடிக்கைகளாகும்.

இதனைத் தேசியத்தின் பெயரால் எதிர்க்கும் தரப்புக்களிடம் எதுவித மாற்று வேலைத்திட்டங்களும் கிடையாது. வெறுமனே பொய்யால் புனையப்பட்ட அறிக்கைகளை விடுவதும், ஒரு சாதாரண தமிழ் சங்கம் செய்யக்கூடிய குடிமக்கள் நடவடிக்கைகயை பெரும் அரசியல் நடவடிக்கையாக கூறுவதும் என்னைப் பொறுத்தவரை உச்சபட்ட ஈகத்தினைச் செய்த மாவீரர்களுக்கு செய்யப்படும் துரோகமாக அல்லது எமது இயக்கத்திற்கு செய்யப்படும் துரோகமாகக் கருதுகின்றேன். நானும், உருத்திரகுமாரனும் இயங்குவது தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் சிலரை அசெளகரியப்படுத்துகின்றது என்பது எனக்கு விளங்குகின்றது.

தலைவர் முன்பொருமுறை கூறியது போன்று உண்மை வெளிக்கிட்டு புறப்படும் முன்னர் பொய் ஒருமுறை ஊர்வலம் வந்து சேரும், ஆனால் உண்மைகள் வெளிவரும் போது அதுவே நிலைத்து நிற்கும்.

கேள்வி: மக்களின் குழப்பத்தினை தீர்ப்பதற்காக சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை ஒருங்கிணைக்கிறீர்களா? கேபிக்கும் உங்களுக்கும், கேபிக்கும் ருத்திரகுமாரனுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

பதில்: கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை நான் ஒருங்கிணைப்பதாக வெளிவந்த தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. அதே போல கே.பி க்கும் உருத்திரகுமாரனுக்கும் தற்போது தொடர்பிருப்பதாக செல்வதிலும் உண்மை இல்லை. தி ஐலன்ட் பத்திரிகையில் கே.பி அவர்களை செவ்வி கண்டதாகக் கூறி அதனைப் பிரசுரித்த அதன் ஊடகவியலாளர் குறிப்பிட்ட ஒரு தகவலினை கே.பி கூறியதாக திரித்து உள்நோக்கம் கொண்ட குழுவொன்று நடத்தும் கேவலமான அரசியலை ஓரமாக வைத்துவிடுங்கள்.

கே.பி கைதுசெய்யப்பட்டு கொழும்பில் இருக்கையில் எனது தலைமையில் கே.பியுடன் செயற்பட்டவர்கள் செயற்படுவதாக தி ஐலன்டின் செய்தியாளர் எழுதுகின்றார். அது கே.பி சொன்னதாக கூட எழுதப்பட்ட செய்தியல்ல. இந்த ஊடகவியலாளர் எதற்காக இவ்வாறு குறிப்பிட்டார் என்பதனையும் அதற்கு இருக்கக்கூடிய உள்நோக்கங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மக்களை முட்டாள்களாக நடத்தும் இந்த இணையப் புலிகளுக்கு மக்கள் தான் பதில் கூற வேண்டும்.

எனக்கு கே.பியினை அறிமுகப்படுத்தியது எனது தலைவர். 1984ல் ஒரு பட்டியலுடன் தலைவர் அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தார். 2003 ம் ஆண்டு வரை அவர் இயங்கினார். அவருடன் நாங்கள் இயங்கினோம். சுமார் 18 வருடமாக பொறுப்பில் இருந்த மூத்த உறுப்பினர் அவர். அவருடன் இயக்கத்தின் வெளிநாட்டுக் கட்டமைப்பில் செயற்பட்ட அனைத்து மூத்த செயற்பாட்டாளர்களுக்கும் பல்லாண்டு தொடர்புகள் இருந்துள்ளது. 2003ல் அல்லது 2009 மே19 ற்குப் பிறகு இயக்கத்திற்குள்? புகுந்தவர்களுக்கு அவரைத் தெரியாது.

நான் அனைத்துலக செயலகப் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்ட பிற்பாடு பணிசார்ந்து கே.பி உடன் நெருங்கிய உறவு நிலையை பேணினேன். பிற்பாடு 2009 சனவரியில் கே.பி மீள தலைவரால் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்ட போது அந்த தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. 2009 மே18 ற்குப் பிற்பாடு அடுத்த கட்டம் பற்றிய கலந்துரையாடல்களில் உலகின் பல மூலைகளிலிருந்தும் போராளிகள், மூத்த செயற்பாட்டாளர்களை கே.பி ஈடுபடுத்திய போது நானும் அந்த நடவடிக்கைகளிற்காக அழைக்கப்பட்டேன். ருத்திரகுமாரனும் அழைக்கப்பட்டார். கே.பியின் கைதுக்குகுப் பிற்பாடு அவரின் விடுதலைக்காக பிரான்சின் மிக முன்னணியான சட்டத்தரணியினை நான் ஏற்பாடு செய்த போதும் சட்டத்தரணிக்கு கொடுக்கப் பணமில்லாமையால் அது கைவிடப்பட்ட துன்பமும் நிகழ்ந்தது.இதுவே எங்களிற்கு இடையேயான தொடர்பு.

கேள்வி: கேபி குழு என்ற ஒன்று குறித்த ஊடகங்களினால் சொல்லப்படுகின்றதே. அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: இது மே18 ற்குப் பிறகு கட்டப்பட்ட கதை. இயக்கத்தினை தெரிந்தவர்களுக்குத் தெரியும் இயக்கத்தினுள் குழுவாதம் அனுமதிக்கப்படுவதில்லை. வேலை சார்ந்த பொறுப்புகளே வழங்கப்படும். கே.பி 20 வருடங்கள் வெளிநாட்டு கட்டமைப்புக்களை கட்டியெழுப்பியவர் என்பதால் பெருந்தொகையான மூத்த உறுப்பினர்களின், அனுபவம் மிக்க உறுப்பினர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தவர். மே18 ற்குப் பிறகு புலிகள் இயக்கத்தினை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்த முற்படும் சக்திகள் இந்த மூத்த, அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை ஓரங்கட்டுவதற்காக் கண்டுபிடித்த சொல் தான் கேபி குழு என்று நான் கருதுகின்றேன்.

இவர்கள் தாம் குழுவாக இயங்கும் காரணத்தினால் என்னவோ எல்வோர் மீதும் குழு என்ற முத்திரை குத்த முற்படுகிறார்கள். இயக்கத்தில் நீண்டகாலம் செயற்பட்டவர்கள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் என்று தம்மை அடையாளப்படுத்தவே விரும்புவார்கள். வேறு ஒரு தனி நபர் பெயரையும் ஏற்றுக் கொள்ளாத மரபு எம்முடையது.

கேள்வி: இயக்கத்தினை சர்வதேச ரீதியாக வழிநடத்தியவரான நீங்கள் இன்றுள்ள செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களிற்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரை எனக்கு தலைவர் சொல்லித்தந்தது, மக்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பதே முக்கியமானது என்பது. அதனையே உங்களுக்கும் சொல்ல விரும்புகின்றேன்.

இரண்டாவது விழிப்புடன் இருங்கள். எமக்குள் இருக்கும் புல்லுருவிகள் பலரும் மே18ற்குப் பிற்பாடு தீவிரமாகியுள்ளனர். எனவே விழிப்பு முக்கியமானது.

மூன்றாவது, தலைவர் ஒரு உயரிய பண்பாட்டினை தந்துள்ளார். அது மதிப்பது. மக்களை மதிப்பது, சக உறுப்பினர்களை மதிப்பது என அந்த மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்.
 
கேள்வி: நாடுகடந்த அரசுவின் தேர்தல் முடிவுகள் இரண்டு தொகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான சர்ச்சையும் உங்களுடன் தொடர்புபட்டது. அதுபற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இத் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை உத்தியோக பூர்வமாக வெளியிடாது உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள முற்பட்டோம். அதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு மனேகரனிடம் நம்பிக்கையில்லை என்று பேசினார்கள். நாம் கலந்து பேசி முடிவில் தமிழர் அல்லாத மாற்றினத்தவர்களைக் கொண்ட சுயாதீனமான குழுவொன்றினால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சுயாதீனக்குழு பிரான்சுக்கார நிபுணர்களைக் கொண்டது. அதன் விசாரணைகளுக்கு அனைவரும் ஒத்தழைப்புக் கொடுத்தனர். குறித்த இருவர், அதாவது நடுநிலைக்குழுவின் விசாரணையைக் கோரிய இருவர் ஒத்துழைக்கவில்லை. விசாரணை அறிக்கைகள் இப்போது தேர்தல் ஆணைக்குழு மற்றும் உருத்திரகுமாரனின் கைகளில் உள்ளது. அதன் முடிவுகள் விரைவில் மக்களின் முன்பாக வைக்கப்படும்.

எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • palli
    palli

    திலகர் உயிருடன் இருந்தால் இவரது பேட்டியை வாசிக்க வேண்டும்; இவரது வளர்ச்சியில் சபாலிங்கத்தின் மறைவும்
    அடங்குமோ…???

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    கேபியின் துரோகம் வரலாறு தீர்மானிக்கட்டும் என்ற ஜால்ரா போட்டுவிட்டு பின் கேபியோடு தொடர்பில்லை என மறுதலிக்கிறீர்கள். நல்லது மூத்த உறுப்பினரே! தலைவர் சொன்னதையெல்லாம் மனப்பாடம் பண்ணி, கிளிப்பிள்ளையாட்டம் ஒப்பிப்பதற்கு உங்களுக்கு தேவையிருகிறது.
    கேபிக்கு தலைவரைக் குடும்பத்தோடு கிளப்ப பணப்பிரச்சினை. உங்களுக்கு கேபியை மீட்க காசுப் பிரச்சனை. அப்போ கேபி பிடிபட்டபின் கோத்தபாயாவிற்கு தாரை வார்த்ததில் எங்கே இருந்தது பணம்?
    பின் நாடு கடந்த தேர்தல் நடத்த உங்களுக்கு எங்கே கிடைத்தது காசு?
    இப்போதாவது புரிகிறதா? உங்களுக்கு போராட்டமே காசுதான்.
    நீங்கள் இதுவரை தமிழ்மக்களுக்கு செய்ததென்ன என்று இணையங்களில் பேட்டி கொடுத்து, கடைசிக் காலத்தையும் களியுங்கள்.
    தமிழா! ஒன்றைப் புரிந்து கொள்.
    காசு இல்லையெனில் போராட்டமில்லை.

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    தமிழ் வாதம் நீங்கள் தான் பொட்டோ? அல்லது பொட்டு தான் நீங்களோ? கடைசி காலத்தில் பொட்டு தன்னை காசு நிரம்பிய லொறியுடன் சேர்ந்து எரித்ததாக கூட ஒரு கதை வன்னியில் அடிபடுகிறது. அட காசு பொட்டைக் கூட விடவில்லை! மற்றது இது வரை தமிழ் மக்களிற்கு அனைவரும் செய்த ஒரு காரியம் நீங்கள் கூறுவது போல் இலவச அட்வைசும் கணனி முன்னான புரட்சியுமே! இதிலை மனோகரன் மீது மட்டும் நீங்கள் பாய்வது உங்களை நோர்வே பக்கம் சாய்க்கிறது. வாதம் தமிழ் வாதமா அல்லது வாதத் தமிழா?

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    சுகுணகுமார்! “பொட்டு வைக்கிற இடத்தில, விசயங்களைப் புட்டு வைக்கக் கூடாது.” இது ஈழப் போராட்டத்தின் ஒரு விதவையாக, நீங்கள் தரவேற்றிய மங்கை அக்கை சொன்னதுதான். நீங்கள் நுணல் என்பதால் நான் நாணல் அல்ல.

    Reply
  • thurai
    thurai

    தமிழர்களின் விடுதலைப்போராட்டம் தமிழர்களின் அழிவிற்கு வழி தேடியது. அதற்கு முதற்காரணம் விடுதலைப்புலிகள். இவர்கள் பயங்கரவாத அமைப்பாக உலகில் தீர்மானிக்கப்பட்டதற்கு புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்களே காரணம். எனவே ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டியவர்களே தமிழர்களின் இன்றைய நிலமை பற்ரி ஆராய்கின்றார்கள். புலியை எதிர்தவர்களை துரோகிகளென மரணதண்டனை வழங்கினீர்களே. இனியாவது சொல்லுங்கள் புலியின் ஆதரவாளர்களில் இதுவரை ஒருவரும் தமிழர்களிர்கு துரோகமாக நடக்கவில்லையா? அல்லது உங்களிர்குத் தெரியவில்லையா? தெரிந்தும் வாய்மூடி இருந்தீர்களா? — துரை

    Reply
  • kannan
    kannan

    தமிழருக்குள் எப்பொழுதும் காட்டிக் கொடுப்பவர்கள் இருப்பார்கள்

    Reply