மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவுமென தேசிய வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பாக வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கையில்,
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து 2006ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். இதற்கேற்ப 2008ம் ஆண்டில் இது தொடர்பான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக நாம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கூறினோம். அதன்படி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வகையில் அரசாங்க நிறுவனங்கள், அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட பொதுநல முக்கியஸ்தர்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் திரட்டி, மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச அமைப்புக்களின் தகவல்களையும் கவனத்தில் கொண்டு தான் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கான முதலாவது வரைவொன்றை நாம் ஏற்கனவே தயாரித்துள்ளோம்.
நான் மனித உரிமைகள் அமைச்சராக இருக்கும் போது இவ் வரைவு தயாரிக்கப்பட்டது. இதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் ஜனாதிபதி வழங்கினார். இந்த வரைவு சட்டமா அதிபரின் பரிசீலனைக்கும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவை அடிப்படையாக வைத்து இறுதி வரைவைத் தயாரிப்பதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது என்றார்.